10
1 தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது.
2 அந்தச் சட்ட வல்லுநனர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில்லை. அவர்கள் ஏழைகளின் உரிமைகளை பறித்துக் கொண்டனர். விதவைகள் மற்றும் அநாதைகளிடமிருந்து திருடுமாறு அவர்கள் அனுமதித்தனர்.
3 சட்டமியற்றுபவர்களே, நீங்கள செய்தவற்றுக்கெல்லாம் விளக்கம் தரவேண்டும். அப்போது என்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தூர நாட்டிலிருந்து அழிவு வரும். உதவிக்கு நீங்கள் எங்கே ஓடுவீர்கள்? உங்கள் பணமும் செல்வமும் உங்களுக்கு உதவி செய்யாது.
4 நீங்கள் சிறைக் கைதியைப்போன்று பணிந்து வாழவேண்டும். நீங்கள் மரித்துப் போனவனைப் போன்று கீழே விழ வேண்டும். ஆனாலும் அது உங்களுக்கு உதவாது! தேவன் இன்னும் கோபமாக இருக்கிறார். தேவன் இன்னும் உங்களைத் தண்டிக்கத் தயாராக இருக்கிறார்.
G o d W ill P u n is h A s s y ria’s P rid e
5 தேவன், நான் அசீரியாவை ஒரு தடியைப்போன்று பயன்படுத்துவேன். கோபத்தில் நான் இஸ்ரவேலைத் தண்டிக்க அசீரியாவைப் பயன்படுத்துவேன்.
6 நான் அசீரியாவை அனுப்பி தீமை செய்கிற என் ஜனங்களுக்கு எதிராகப் போராடச் சொல்லுவேன். நான் அந்த ஜனங்கள் மேல் கோபமாக இருக்கிறேன். அவர்களை எதிர்த்துப் போரிடுமாறு அசீரியாவிற்குக் கட்டளையிட்டேன். அசீரியா அவர்களைத் தோற்கடிக்கும். அவர்களது செல்வங்களை அசீரியா எடுத்துக்கொள்ளும். இஸ்ரவேல் அசீரியாவிற்கு மிதிக்கப்படுகிற அழுக்கைப்போலிருக்கும்.
7 “ஆனால் நான்தான் அதனைக் பயன்படுத்துகிறேன் என்பது அசீரியாவிற்குத் தெரியாது. எனக்கு அது ஒரு கருவி என்பது அசீரியாவிற்கு புரியாது. மற்றவர்களை அழிக்கவேண்டும் என்று மட்டுமே அசீரியா விரும்புகிறது. அசீரியா பல நாடுகளை அழிக்கவேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறது.
8 அசீரியா தனக்குள், ‘எனது தலைவர்களெல்லாம் அரசர்களைப் போன்றவர்கள்!’
9 கல்னோ நகரமானது கர்கேமிசைப் போன்றது. ஆமாத் நகர் அர்பாத்தை போன்றது. சமாரியா தமஸ்குவைப் போன்றது.
10 நான் அந்தத் தீமையான அரசுகளைத் தோற்கடித்தேன், இப்போது அவற்றை நான் கட்டுப்படுத்துகிறேன். அவர்களால் தொழுதுகொள்ளப்படுகிற விக்கிரகங்கள் எருசலேம் மற்றும் சமாரியாவில் உள்ள விக்கிரகங்களைவிட எண்ணிக்கையில் மிகுந்தவை.
11 நான் சமாரியாவையும் அதிலுள்ள விக்கிரகங்களையும் தோற்கடித்தேன். நான் எருசலேமையும் அந்த ஜனங்கள் செய்த விக்கிரகங்களையும் தோற்கடிப்பேன்” என்றனர். என்பார்.
12 எனது ஆண்டவர், எருசலேமில் சீயோன் மலையிலும் செய்யவேண்டுமென்று திட்டமிட்டவற்றைச் செய்து முடிப்பார். பிறகு கர்த்தர் அசீரியாவைத் தண்டிப்பார். அசீரியாவின் அரசன் வீண் பெருமைகொண்டவன். அவனது பெருமை அவனைப் பல தீய செயல்களைச் செய்ய வைத்தது. எனவே, தேவன் அவனைத் தண்டிப்பார்.
13 அசீரியாவின் அரசன், “நான் ஞானமுள்ளவன். எனது சொந்த ஞானத்தாலும் பெலத்தாலும் நான் பல பெரியக் காரியங்களைச் செய்திருக்கிறேன். நான் பல நாடுகளைத் தோற்கடித்துள்ளேன். நான் அவற்றின் செல்வங்களைப் பறித்துள்ளேன். அங்குள்ள ஜனங்களை நான் அடிமைகளாக எடுத்துள்ளேன். நான் மிகவும் பெலமுள்ளவன்.
14 எனது சொந்தக் கைகளால் அனைத்து ஜனங்களின் செல்வங்களையும் ஒருவன் ஒரு பறவையின் முட்டைகளையெல்லாம், எடுத்துக்கொள்வதுபோல் எடுத்துக்கொண்டேன். பறவை தன் கூட்டையும் முட்டைகளையும் விட்டுவிட்டுப் போகும். அக்கூட்டைக் காப்பாற்ற எதுவுமில்லை. எந்தப் பறவையும் தன் அலகாலும் இறக்கைகளாலும் எதிர்த்துப் போரிடாது. எனவே, ஜனங்கள் முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அதைப்போலவே, பூமியில் உள்ள ஜனங்களையெல்லாம் நான் எடுத்துக்கொள்வதை, எவரும் தடுக்க முடியாது” என்றார்.
15 ஒரு கோடரி அதைப் பயன்படுத்தி வெட்டுகிற வனைவிடச் சிறந்ததல்ல. அரிவாளானது அதை வைத்திருப்பவனைவிடச் சிறந்ததல்ல. ஆனால் அசீரியாவோ தன்னைத் தேவனைவிட முக்கிய மானதாகவும் பெலமுடையதாகவும் நினைக்கிறது. தடியானது தன்னைப் பயன்படுத்தி தண்டிப்பவனைவிட பெலமுள்ளதாகவும், முக்கியமானதாகவும் நினைப்பது போன்றதாகும்.
16 அசீரியா தன்னைப் பெரிதாக நினைத்துகொள்ளும். ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவிற்கு எதிராக மிகப் பயங்கரமான நோயை அனுப்புவார். நோயுற்றவன் தன் எடையை இழப்பது போன்று அசீரியா தனது செல்வத்தையும் பெலத்தையும் இழக்கும். பிறகு அசீரியாவின் மகிமையும் அழியும். எல்லாம் அழியும்வரை நெருப்பு எரிவதுபோல் அது இருக்கும்.
17 இஸ்ரவேலின் வெளிச்சமானவர் (தேவன்) ஒரு நெருப்பைப் போன்றவர். பரிசுத்தமானவர் ஜுவாலையைப் போன்றவர். அது ஒரு நெருப்பைப்போன்று முதலில் முட்களையும் நெருஞ்சிகளையும் எரிக்கும்.
18 பிறகு, அது பெரிய மரங்களையும், திராட்சைச் தோட்டங்களையும் எரிக்கும், இறுதியாக, ஜனங்கள் உட்பட எல்லாமே அழிக்கப்படும். தேவன் அசீரியாவை அழிக்கும்போது அப்படி இருக்கும். அசீரியா அழுகிய தடியைபோன்றிருக்கும்.
19 காட்டில் சில மரங்கள் மட்டும் அவனுக்காக விடப்பட்டிருக்கும். ஒரு சிறுபிள்ளைகூட அவற்றை எண்ண முடியும்.
20 அப்போது, இஸ்ரவேலில் மீதியுள்ள ஜனங்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும் தம்மை அடித்தவர்களைச் சார்ந்திருக்கமாட்டார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தரை உண்மையாகவே சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வார்கள்.
21 யாக்கோபின் குடும்பத்தில் மீதியுள்ள ஜனங்கள் மீண்டும் வல்லமைமிக்க தேவனைப் பின்பற்றுவார்கள்.
22 உங்கள் ஜனங்கள் மிகுதியானவர்கள். அவர்கள் கடற்கரையின் மணலைப் போன்றவர்கள். ஆனால் கொஞ்சம் ஜனங்களே தேவனிடம் திரும்பி வருவார்கள். ஆனால் முதலில் உனது நாடு அழிக்கப்படும். நாட்டை அழித்துவிடுவதாக தேவன் அறிவித்திருக்கிறார். பிறகே, நாட்டுக்கு நன்மை வந்து சேரும். இது ஆறு நிரம்பிவருவது போன்றது.
23 சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர், நிச்சயமாக இந்த நாட்டை அழிப்பார்.
24 எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “சீயோன் மலையில் வாழும் என் ஜனங்களே, அசீரியாவுக்கு அஞ்சவேண்டாம்! முன்பு உங்களை எகிப்து அடித்ததுபோன்று அது அடிக்கும். உங்களைக் காயப்படுத்த அசீரியா தடியைப் பயன்படுத்தியது போன்று அது இருக்கும்.
25 ஆனால் சிறிது காலத்தில் என் கோபம் நிறுத்தப்படும். அசீரியா உங்களைப் போதுமான அளவிற்குத் தண்டித்துவிட்டது என்று நான் திருப்தி அடைவேன்” என்றார்.
26 பிறகு சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவை ஒரு சவுக்கால் அடிப்பார். கடந்த காலத்தில், கர்த்தர் மீதியானியர்களை காகத்தின் பாறை அருகில் தோற்கடித்தார். கர்த்தர் அசீரியாவைத் தாக்குவதுப்போல் இருக்கும். முன்பு கர்த்தர் எகிப்தைத் தண்டித்தார். அவர் தன் தடியைக் கடலுக்குமேல் ஓங்கினார். தம் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார். அது அசீரியாவிலிருந்து கர்த்தர் தம் ஜனங்களைக் காப்பாற்றியது போலவே இருக்கும்.
27 உங்களுக்கு அசீரியா துன்பங்களைக் கொண்டுவரும். அந்தத் துன்பங்கள் உங்கள் தோளில் நுகம் வைத்துத் தாங்குகிற அளவிற்கு இருக்கும். ஆனால், அந்த நுகமானது உங்கள் தோளில் இருந்து விலக்கப்படும். அந்நுகம் தேவனால் உடைக்கப்படும்.
இஸ்ரவேலுக்குள் அசீரியப் படைகள் நுழைதல்
28 படையானது “ஆயாத்து” அருகில் நுழையும். அப்படை மிக்ரோன்வரை கடந்துசெல்லும். அப்படை மிக்மாசிலே தன் உணவுப் பொருட்களை வைத்திருக்கும்.
29 அப்படை ஆற்றை மாபாலில் “கடக்கும்” அது கேபாவில் தூங்கும். ராமா அதைப் பார்த்து அஞ்சும், சவுலின் ஊராகிய கிபியாவின் ஜனங்கள் ஓடிச்செல்வார்கள்.
30 பாத் காலீமே சத்தமிட்டு அழு! லாயீஷா கவனி. ஆனதோத்தே பதில் சொல்!
31 மத்மேனாலின் ஜனங்கள் ஓடிப்போனார்கள். கேபிமின் ஜனங்கள் ஒளிந்துகொண்டார்கள்.
32 இந்நாளில், படையானது நோபிலே நிறுத்தப்படும். அப்படையானது எருசலேம் மலையான சீயோனுக்கு எதிராகப் போரிடத் தயார் செய்யும்.
33 கவனி! சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய எனது ஆண்டவர், அசீரியா என்னும் மரத்தை வெட்டித் தள்ளுவார். கர்த்தர் தமது பெரும் பலத்தால் இதனைச் செய்துமுடிப்பார். பெரிய முக்கிய ஜனங்கள் வெட்டி வீசப்படுவார்கள். அவர்கள் முக்கியம் இல்லாமல் போவார்கள்.
34 கர்த்தர் அக்காட்டினைத் தனது கோடரியால் வெட்டுவார். லீபனோனில் உள்ள (முக்கிய ஜனங்களான) பெரிய மரங்களும் விழும்.