ஒரு புதிய நாள் வருகிறது
9
கடந்த காலத்தில், ஜனங்கள் செபுலோன் நாட்டையும் நப்தலி நாட்டையும் முக்கியமானதாகக் கருதவில்லை. ஆனால் பிற்காலத்தில், அந்த நாட்டைத் தேவன் மேம்படுத்துவார். அது கடலுக்கு அருகில் உள்ள நாடும், யோர்தான் நதிக்கு அப்புறத்திலுள்ள நாடும், யூதரல்லாதவர்கள் வாழும் கலிலேயா நாடும் சேர்ந்ததாகும்.
இப்போது இருளில் வாழ்கின்றனர். அவர்கள் பெரும் வெளிச்சத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் ஓரிடத்தில் வாழ்கின்றனர். அது மரண இருளை போன்ற இடம். ஆனால் அவர்கள் மேல் பெரிய வெளிச்சம் உதிக்கும்.
தேவனே, நாட்டை வளரும்படிச் செய்ய வேண்டும். ஜனங்களை நீர் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். ஜனங்கள் தம் மகிழ்ச்சியை உம்மிடம் காட்டுவார்கள். அது அறுவடை காலத்தின் மகிழ்ச்சியைப் போன்று இருக்கும். போரில் வென்று ஜனங்கள் தம் பங்கைப் பகிர்ந்துகொள்ளும்போதுள்ள மகிழ்ச்சியைப்போன்று அது இருக்கும். ஏனென்றால், நீர் அவர்களின் மிகுந்த பாரத்தை நீக்குவீர். ஜனங்களின் முதுகில் இருக்கும் பெரிய நுகத்தடியை நீக்குவீர். உமது ஜனங்களைப் பகைவர்கள் தண்டிக்கப் பயன்படுத்திய கோலையும் விலக்கி விடுவீர். இது நீங்கள் மீதியானியரைத் தோற்கடித்த காலத்தைப் போன்று இருக்கும்.
போர் செய்வதற்காக நடந்து சென்ற ஒவ்வொரு காலணியும் அழிக்கப்படும். இரத்தம் தோய்ந்த ஒவ்வொரு சீருடையும் அழிக்கப்படும். அவை நெருப்பிலே வீசப்படும்.
விசேஷித்த மகன் பிறக்கும்போது இவைகளெல்லாம் நடைபெறும். தேவன் நமக்கு ஒரு மகனைக் கொடுப்பார். இவரே ஜனங்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்புள்ளவராக இருப்பார். அவரது நாமமானது “ஆலோசகர், வல்லமை மிக்க தேவன், நித்திய பிதா, அதிசயமுள்ளவர், சமாதானத்தின் இளவரசர்” என்று இருக்கும். அவரது அரசாங்கத்தில் பலமும் சமாதானமும் இருக்கும். தாவீதின் குடும்பத்திலிருந்து வரும் இந்த அரசர் நன்மையையும் நீதியையும் பயன்படுத்தி தமது அரசாங்கத்தை என்றென்றைக்கும் ஆண்டு வருவார்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம் ஜனங்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர். அந்தப் பலமான அன்பு இவற்றையெல்லாம் செய்யக் காரணமாய் இருக்கின்றது.
தேவன் இஸ்ரவேலைத் தண்டிப்பார்
எனது கர்த்தர் யாக்கோபின் ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) எதிராக ஒரு கட்டளையிட்டார். இஸ்ரவேலின்மேல் அந்தக் கட்டளை வரும்.
பிறகு எப்பிராயீமில் (இஸ்ரவேலில்) உள்ள ஒவ்வொருவரும், சமாரியாவில் உள்ள தலைவர்களும்கூட தேவன் அவர்களைத் தண்டித்தார் என்பதை அறிந்துகொள்வார்கள்.
இப்போது அந்த ஜனங்கள் பெருமையும் ஆணவமும் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், 10 “இந்தச் செங்கற்கள் விழலாம், ஆனால் நாங்கள் மீண்டும் கட்டுவோம். நாங்கள் பலமான கற்களால் கட்டுவோம். இந்தச் சிறு மரங்கள் வெட்டப்படலாம். ஆனால் நாங்கள் புதிய மரங்களை நடுவோம். அப்புதிய மரங்கள் பெரியதாகவும், உறுதியுடையதாகவும் இருக்கும்” என்றனர். 11 எனவே, கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட ஜனங்களை கண்டுபிடிப்பார். கர்த்தர் ரேத்சீனின் பகைவர்களை அவனுக்கு எதிராகக் கொண்டுவருவார். 12 கர்த்தர் கிழக்கிலிருந்து ஆராமியரையும் மேற்கிலிருந்து பெலிஸ்தர்களையும் கொண்டுவருவார். அவர்கள் தம் படையால் இஸ்ரவேலர்களைத் தோற்கடிப் பார்கள். ஆனால், கர்த்தர் மேலும் இஸ்ரவேலர்களோடு கோபமாக இருப்பார். கர்த்தர் அந்த ஜனங்களை மேலும் தண்டிக்கத் தயாராக இருப்பார்.
13 தேவன் அவர்களைத் தண்டிப்பார். ஆனால் அவர்கள் தங்கள் பாவங்களை நிறுத்தமாட்டார்கள். அவர்கள் அவரிடம் திரும்பமாட்டார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பின்பற்றமாட்டார்கள். 14 எனவே கர்த்தர் இஸ்ரவேலின் தலையையும் வாலையும் வெட்டி வீசுவார். ஒரே நாளில் கர்த்தர் கிளைகளையும் நாணலையும் வெட்டிப் போடுவார். 15 (தலை என்றால் மூப்பர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் என்று பொருள். வால் என்றால் பொய் சொல்லும் தீர்க்கதரிசிகள் என்று பொருள்).
16 ஜனங்களை வழிநடத்துபவர்கள் தவறான பாதையில் வழிநடத்திச் செல்கிறார்கள். அவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் அழிந்துபோகிறார்கள். 17 அனைத்து ஜனங்களும் தீமையானவர்கள். எனவே இளைஞர்களைப்பற்றிக் கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். அவர்களின் விதவைகளிடமும், அநாதைகளிடமும் அவர் இரக்கம் காட்டமாட்டார். ஏனென்றால், அனைவரும் தீமையானவர்கள். ஜனங்கள் செய்வதெல்லாம் தேவனுக்கு எதிரானவையே. ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். எனவே, தேவன் தொடர்ந்து ஜனங்களிடம் கோபமாக உள்ளார். தேவன் தொடர்ந்து அந்த ஜனங்களை தண்டிக்கிறார்.
18 தீமையானது சிறு நெருப்பைப் போன்றது. முதலில் அது முட்களையும் நெருஞ்சியையும் எரிக்கும். பிறகு அது காட்டிலுள்ள பெரும் புதர்களை எரிக்கின்றது. இறுதியாக அது பெருநெருப்பாகி எல்லாம் புகையோடு போகும்.
19 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கோபமாக இருக்கிறார். எனவே, இந்த நாடு எரியும். எல்லா ஜனங்களும் நெருப்பில் எரிவார்கள். எவரும் தன் சகோதரனைக் காப்பாற்ற முயலமாட்டார்கள். 20 ஜனங்கள் வலது பக்கத்திலிருந்து பிடுங்கித் தின்றாலும் பசியோடு இருப்பார்கள். இடது பக்கத்திலிருந்து பிடுங்கித் தின்றாலும் பசியோடு இருப்பார்கள். பிறகு ஒவ்வொருவரும் திரும்பித் தங்களையே தின்பார்கள். 21 (இதற்கு மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் எதிர்த்துப் போராடுவார்கள். பிறகு இருவரும் யூதாவிற்கு எதிராகத் திரும்புவார்கள் என்று பொருள்).
கர்த்தர் இன்னும் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபமாக இருக்கிறார். கர்த்தர் அந்த ஜனங்களைத் தண்டிக்கத் தயாராக உள்ளார்.