சங்கீதம்– ௩௭
தாவீதின் பாடல்
௧ பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. ௨ அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள். ௩ கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். ௪ கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். ௫ உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். ௬ உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார். ௭ கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே. ௮ கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். ௯ பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். ௧௦ இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. ௧௧ சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். ௧௨ துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, அவன்மேல் பல்லைக் கடிக்கிறான். ௧௩ ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். ௧௪ சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். ௧௫ ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; அவர்கள் வில்லுகள் முறியும். ௧௬ அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. ௧௭ துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். ௧௮ உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். ௧௯ அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். ௨௦ துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள். ௨௧ துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். ௨௨ அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள். ௨௩ நல்ல மனிதனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். ௨௪ அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். ௨௫ நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. ௨௬ அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். ௨௭ தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். ௨௮ கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும். ௨௯ நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள். ௩௦ நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். ௩௧ அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. ௩௨ துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். ௩௩ கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. ௩௪ நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். ௩௫ கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ௩௬ ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை. ௩௭ நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். ௩௮ அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு. ௩௯ நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். ௪௦ கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.