அத்தியாயம்– ௨௮
அனுதின காணிக்கை
௧ கர்த்தர் மோசேயை நோக்கி: ௨ எனக்கு நறுமணவாசனையாக, தகனபலிகளுக்குரிய காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படி கவனமாக இருக்கவேண்டும் என்று நீ இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிடு. ௩ மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நிரந்தர சர்வாங்கதகனபலியாக நாள்தோறும் ஒருவயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். ௪ காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு, ௫ உணவுபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தவேண்டும். ௬ இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நிரந்தர சர்வாங்கதகனபலி; இது கர்த்தருக்கு நறுமண வாசனைக்கான தகனபலி. ௭ காற்படி திராட்சைரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படவேண்டும். ௮ காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியாகச் செலுத்தவேண்டும்.
ஓய்வு நாள் காணிக்கை
௯ ஓய்வுநாளிலோ உணவுபலிக்காக ஒருவயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தவேண்டும். ௧௦ எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும். ௧௧ உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தவேண்டும். ௧௨ உணவுபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், உணவுபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும், ௧௩ உணவுபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும். ௧௪ அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சைரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாக இருக்கவேண்டும்; இது வருடமுழுவதும் மாதம்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்கதகனபலி. ௧௫ எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரணபலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.
பஸ்கா
௧௬ முதலாம் மாதம் பதினான்காம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா. ௧௭ அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகை நாள்; ஏழு நாட்களளவும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும். ௧௮ முதலாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அன்றையதினம் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. ௧௯ அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ௨௦ அவைகளுக்கேற்ற உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், ௨௧ ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், ௨௨ உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். ௨௩ காலையிலே எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும் தவிர இவைகளையும் செலுத்தவேண்டும். ௨௪ இப்படியாக ஏழுநாட்களளவும் நாள்தோறும் கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டும்; எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியையும் அதின் பானபலியையும் தவிர, இதையும் செலுத்தவேண்டும். ௨௫ ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.
பண்டிகைகளின் வாரம்
௨௬ அந்த வாரங்களுக்குப்பின்பு நீங்கள் கர்த்தருக்குப் புதிய உணவுபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. ௨௭ அப்பொழுது நீங்கள் கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ௨௮ அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், ௨௯ ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், ௩௦ உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். ௩௧ நிரந்தர சர்வாங்கதகனபலியையும் அதின் உணவுபலியையும் அதின் பானபலியையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்; இவைகள் பழுதற்றவைகளாக இருக்கவேண்டும்.