அத்தியாயம்– ௧௦
உடன்படிக்கை செய்தவர்களின் பெயர் பட்டியல்
௧ முத்திரையிடப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர்கள் என்னவென்றால்: அகலியாவின் மகனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா, ௨ செராயா, அசரியா, எரேமியா, ௩ பஸ்கூர், அமரியா, மல்கிஜா, ௪ அத்தூஸ், செபனியா, மல்லூக், ௫ ஆரீம், மெரெமோத், ஒபதியா, ௬ தானியேல், கிநேதோன், பாருக், ௭ மெசுல்லாம், அபியா, மீயாமின், ௮ மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும், ௯ லேவியர்களாகிய அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும், ௧௦ அவர்கள் சகோதரர்களாகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான், ௧௧ மீகா, ரேகோப், அசபியா, ௧௨ சக்கூர், செரெபியா, செபனியா, ௧௩ ஒதியா, பானி, பெனினு என்பவர்களும், ௧௪ மக்களின் தலைவர்களாகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி, ௧௫ புன்னி, அஸ்காத், பெபாயி, ௧௬ அதோனியா, பிக்வாய், ஆதின், ௧௭ அதேர், இஸ்கியா, அசூர், ௧௮ ஒதியா, ஆசூம், பேசாய், ௧௯ ஆரீப், ஆனதோத், நெபாய், ௨௦ மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர், ௨௧ மெஷெசாபெயேல், சாதோக், யதுவா, ௨௨ பெலத்தியா, ஆனான், ஆனாயா, ௨௩ ஓசெயா, அனனியா, அசூப், ௨௪ அல்லோகேஸ், பிலகா, சோபேக், ௨௫ ரேகூம், அஷபனா, மாசெயா, ௨௬ அகியா, கானான், ஆனான், ௨௭ மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே. ௨௮ மக்களில் மற்றவர்களாகிய ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், ஆலய பணியாளர்களும், தேசங்களின் மக்களைவிட்டுப் பிரிந்து தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குத் திரும்பின அனைவரும், அவர்களுடைய மனைவிகளும், மகன்களும், மகள்களுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லோரும், ௨௯ தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரர்களோடு கூடிக்கொண்டு: தேவனுடைய ஊழியனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் முறையில் நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும், ௩௦ நாங்கள் எங்களுடைய மகள்களை தேசத்தின் மக்களுக்குக் கொடுக்காமலும், எங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை எடுக்காமலும் இருப்போம் என்றும், ௩௧ தேசத்தின் மக்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியங்களையும் விற்பதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் வாங்காதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருடத்தை விடுதலை வருடமாக்கி எல்லா கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டு ஒப்பந்தம் செய்தார்கள். ௩௨ மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்து அப்பங்களுக்கும், நிரந்தர உணவுபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நிரந்தர சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், அபிஷேகத்துக்கான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும், ௩௩ எங்கள் தேவனுடைய ஆலயத்தின் எல்லா வேலைக்கும், வருடந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற பொறுப்பை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம். ௩௪ நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருடாவருடம் எங்கள் முன்னோர்களின் குடும்பங்களின்முறையே, எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், மக்களுக்கும் சீட்டுப்போட்டோம். ௩௫ நாங்கள் வருடந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித மரங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும், ௩௬ நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் மகன்களில் முதற்பிறந்தவர்களையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் முதற்பிறந்தவைகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், ௩௭ நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், எல்லா மரங்களின் முதற்பலனாகிய திராட்சைப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்க ஆசாரியர்களிடத்திற்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியர்களாகிய இவர்கள் எங்கள் வேளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும், ௩௮ லேவியர்கள் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் மகனாகிய ஒரு ஆசாரியன் லேவியர்களோடுகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர்கள் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் முடிவுசெய்துகொண்டோம். ௩௯ பரிசுத்த இடத்தின் பணிபொருட்களும், ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் மக்களும், லேவிகோத்திரத்தார்களும் தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இந்த விதமாக நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரிக்காமல் விடுவதில்லையென்று முடிவுசெய்துகொண்டோம்.