அத்தியாயம்– ௧௨
யோபுவின் வார்த்தைகள்
௧ யோபு மறுமொழியாக: ௨ ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; உங்களுடனே ஞானம் சாகும். ௩ உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்? ௪ என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான். ௫ ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும். ௬ திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார். ௭ இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும். ௮ அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்குப் போதிக்கும்; சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும். ௯ கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்? ௧௦ எல்லா உயிரினங்களின் உயிரும், மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது. ௧௧ வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா? ௧௨ முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே. ௧௩ அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. ௧௪ இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது. ௧௫ இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும். ௧௬ அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள். ௧௭ அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளின் புத்தியை மயக்குகிறார். ௧௮ அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார். ௧௯ அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார். ௨௦ அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையைத் தள்ளிப்போடுகிறார். ௨௧ அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்; பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார். ௨௨ அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். ௨௩ அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார். ௨௪ அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார். ௨௫ அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார்.