அத்தியாயம்– ௩
நாக்கை அடக்குதல்
௧ என் சகோதரர்களே, அதிக தண்டனையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகர்களாகாதிருங்கள். ௨ நாம் எல்லோரும் அநேக காரியங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணமனிதனும், தன் சரீரம் முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாக இருக்கிறான். ௩ பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம். ௪ கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாக இருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அந்த இடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்புகிறான். ௫ அப்படியே, நாக்கானதும் சிறிய உறுப்பாக இருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! ௬ நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! ௭ எல்லாவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீரில்வாழும் உயிரினங்கள் ஆகிய இவைகள் மனிதர்களால் அடக்கப்படும், அடக்கப்பட்டதும் உண்டு. ௮ நாக்கை அடக்க ஒரு மனிதனாலும் முடியாது; அது அடங்காத பொல்லாங்கு உள்ளதும், மரணத்திற்கு ஏதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. ௯ அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனிதர்களை அதினாலேயே சபிக்கிறோம். ௧௦ துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரர்களே, இப்படி இருக்ககூடாது. ௧௧ ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? ௧௨ என் சகோதரர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான தண்ணீரைக் கொடுக்காது.
இரண்டுவிதமான ஞானம்
௧௩ உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடு தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும். ௧௪ உங்களுடைய இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டவேண்டாம்; சத்தியத்திற்கு விரோதமாகப் பொய் சொல்லாமலிருங்கள். ௧௫ இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாக இல்லாமல், உலக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்திற்குரியதாகவும், பேய்த்தனத்திற்குரியதுமாகவும் இருக்கிறது. ௧௬ வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் எல்லாத் தீயச்செய்கைகளுமுண்டு. ௧௭ பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது. ௧௮ நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.