அத்தியாயம்– ௩௮
எசேக்கியாவின் வியாதி
௧ அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயிலிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரணமடைவீர் என்று கர்த்தர் சொல்கிறார் என்றான். ௨ அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ௩ ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்து, எசேக்கியா மிகவும் அழுதான். ௪ அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது: ௫ நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களுடன் பதினைந்து வருடங்கள் கூட்டுவேன். ௬ நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, இந்த நகரத்திற்கு ஆதரவாயிருப்பேன். ௭ இதோ, ஆகாசுடைய சூரியக்கடிகாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார். ௮ தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடிகாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துக்கோடுகள் திரும்பிற்று. ௯ யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கி சுகமாமானபோது எழுதிவைத்ததாவது: ௧௦ நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். ௧௧ கர்த்தரை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளுடன் இருந்து மனிதர்களை நான் காண்பதில்லை. ௧௨ என் ஆயுள் மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர். ௧௩ விடியற்காலம்வரை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கத்தைப்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர் என்று சொல்லி, ௧௪ நாரையைப்போலவும், தகைவிலான் குருவியைப்போலவும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றேன். ௧௫ நான் என்ன சொல்வேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுளின் வருடங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன். ௧௬ ஆண்டவரே, இவைகளினால் மனிதர்கள் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னை சுகமடையவும் பிழைக்கவும்செய்தீர். ௧௭ இதோ, சமாதானத்திற்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர். ௧௮ பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. ௧௯ நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான். ௨௦ கர்த்தர் என்னை காப்பாற்ற வந்தார்; ஆகையால் எங்கள் உயிருள்ள நாட்களெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான். ௨௧ அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போடுங்கள்; அப்பொழுது பிழைப்பார் என்று ஏசாயா சொல்லியிருந்தான். ௨௨ அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.