அத்தியாயம்– ௫
ஆதாமின் வம்சவரலாறு
௧ ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார். ௨ அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார். ௩ ஆதாம் நூற்றுமுப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான். ௪ ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ௫ ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் தொளாயிரத்துமுப்பது வருடங்கள்; அவன் இறந்தான்.
௬ சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான். ௭ சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ௮ சேத்துடைய நாட்களெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருடங்கள்; அவன் இறந்தான். ௯ ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். ௧௦ ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, எண்ணூற்றுப் பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ௧௧ ஏனோசுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருடங்கள், அவன் இறந்தான். ௧௨ கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான். ௧௩ கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ௧௪ கேனானுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருடங்கள்; அவன் இறந்தான். ௧௫ மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான். ௧௬ மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். ௧௭ மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருடங்கள்; அவன் இறந்தான். ௧௮ யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான். ௧௯ யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ௨௦ யாரேதுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருடங்கள்; அவன் இறந்தான். ௨௧ ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான். ௨௨ ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். ௨௩ ஏனோக்குடைய நாட்களெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருடங்கள். ௨௪ ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். ௨௫ மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான். ௨௬ மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ௨௭ மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருடங்கள்; அவன் இறந்தான். ௨௮ லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து, ௨௯ கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். ௩௦ லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். ௩௧ லாமேக்குடைய நாட்களெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருடங்கள்; அவன் இறந்தான்.
௩௨ நோவா ஐந்நூறு வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.