கர்த்தருடைய துதிகளைப் பாடும் தாவீதின் பாட்டு
22
கர்த்தர் தாவீதை சவுல் மற்றும்
பகைவர்களிடமிருந்து பாதுகாத்த போது, தாவீது கர்த்தரைப் புகழ்ந்து பாடிய பாட்டு.
கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம்.
அவர் எனது தேவன்.
நான் பாதுகாப்பைத் தேடி ஓடும் கன்மலை.
தேவன் எனது கேடயம்.
அவரது ஆற்றல் என்னைக் காக்கிறது.
மலைகளின் உச்சியில் நான் மறைந்துக் கொள்ள ஏதுவான என் பாதுகாப்பிடம் கர்த்தர் ஆவார்.
கொடிய பகைவரிடமிருந்து
அவர் என்னைக் காக்கிறார்.
அவர்கள் என்னைக் கேலிச் செய்தனர்.
ஆனால் நான் கர்த்தரை உதவிக்கு அழைத்தேன்.
என் பகைவரிடமிருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்!
என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்!
மரணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்தன.
மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின.
மரணத்தின் கண்ணி எனக்கு முன் இருந்தது.
மாட்டிக்கொண்ட நான் கர்த்தரிடம் உதவிக் கேட்டேன்.
ஆம், எனது தேவனை அழைத்தேன்.
தேவன் தமது ஆலயத்தில் இருந்து என் குரலைக் கேட்டார்.
அவர் என் அழுகையைக் கேட்டார்.
பின்பு பூமி அசைந்து நடுங்கியது, பரலோகத்தின் அடித்தளம் ஆடியது.
ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்.
தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்தது.
எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது.
எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன.
10 கர்த்தர் ஆகாயத்தைக் கீறி கீழிறங்கி வந்தார்!
அவர் கட்டியான கறுப்பு மேகத்தில் நின்றார்!
11 அவர் பறந்துக்கொண்டிருந்தார் கேருபீன்கள் மீது பறந்து வந்தார்.
காற்றின் மீது பயணம் வந்தார்.
12 கர்த்தர் கருமேகத்தைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரம்போல் அணிந்தார்.
அவர் கட்டியான இடி மேகங்களில் தண்ணீரைச் சேகரித்தார்.
13 அவரது ஒளி நிலக்கரியைக் கூட எரிய வைக்கும் பிரகாசத்தைக் கொண்டது!
14 வானிலிருந்து இடியைப்போல கர்த்தர் முழங்கினார்!
உன்னதமான தேவன் தனது குரலை எல்லோரும் கேட்கும்படி செய்தார்.
15 கர்த்தர் தனது அம்புகளை எய்து
பகைவர்களைப் பயந்தோடச் செய்தார்.
கர்த்தர் மின்னலை அனுப்பினார்
ஜனங்கள் குழம்பிச் சிதறியோடினார்கள்.
16 கர்த்தாவே நீர் பலமாகப் பேசினீர்.
பலமுள்ள காற்று உங்கள் வாயிலிருந்து அடித்தது.
தண்ணீர் விலகிற்று.
எங்களால் கடலின் அடிப்பாகத்தைப் பார்க்கமுடிந்தது.
பூமியின் அடித்தளத்தையும் எங்களால் பார்க்க முடிந்தது.
17 கர்த்தர் எனக்கும் உதவினார்!
கர்த்தர் மேலிருந்து கீழே வந்தார். கர்த்தர் என்னை துன்பத்திலிருந்துக் காப்பாற்றினார்.
18 என் பகைவர்கள் என்னைவிட பலமானவர்கள்.
அவர்கள் என்னை வெறுத்தார்கள்.
என் பகைவர்கள் என்னை வெல்லக் கூடியவர்கள்!
எனவே தேவன் தாமே என்னை பாதுகாத்தார்.
19 நான் தொல்லையில் இருந்தேன்.
என் பகைவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால் எனக்கு உதவிச்செய்ய கர்த்தர் இருந்தார்!
20 கர்த்தர் என்மேல் பிரியமாயிருக்கிறார்.
எனவே என்னைக் காத்தார்.
பாதுகாப்பான இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
21 கர்த்தர் எனக்கான வெகுமதியை எனக்குத் தருவார்.
ஏனெனில் நான் சரியானவற்றையே செய்தேன்.
நான் தவறிழைக்கவில்லை.
எனவே அவர் எனக்கு நல்லதைச் செய்வார்.
22 ஏனென்றால் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்!
எனது தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்யவில்லை.
23 நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன்
அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!
24 நான் பரிசுத்தமானவனாகவும் களங்கமற்றவனாகவும் அவர் முன்னிலையில் இருந்தேன்.
25 எனவே கர்த்தர் எனக்கு வெகுமதியைத் தருவார்!
ஏனெனில் சரியானதையே நான் செய்தேன்!
நான் தவறு செய்யவில்லை.
எனவே அவர் எனக்கு நலமானதைச் செய்வார்.
26 ஒருவன் உண்மையிலேயே உம்மை விரும்பினால் அவனுக்கு உண்மையான அன்பை நீர் காட்டுவீர்.
ஒருவன் உம்மிடம் உண்மையாக இருந்தால் நீர் அவனிடம் உண்மையாக இருப்பீர்.
27 கர்த்தாவே, யார் நல்லவராகவும் பரிசுத்தமானவராகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் நல்லவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்கிறீர்.
உம்மிடம் மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் நடந்துகொள்வீர்.
28 கர்த்தாவே, சிறுமைப்பட்ட ஜனங்களுக்கு உதவுகிறீர்.
மேட்டிமையானவர்களை நாணமுற வைக்கிறீர்.
29 கர்த்தாவே, நீர் என்னுடைய விளக்கு.
கர்த்தர் என்னைச் சுற்றியுள்ள இருளைப் போக்கி ஒளி தருகிறார்!
30 கர்த்தாவே, உம்முடைய உதவியால் நான் வீரர்களுடன் பாயமுடியும்.
தேவனுடைய உதவியால் பகைவர்களின் சுவர்களில் என்னால் ஏறமுடியும்.
31 தேவனுடைய ஆற்றல் முழுமையானது.
கர்த்தருடைய சொல் சோதித்துப்பார்க்கப்பட்டது.
அவரை நம்புகிறவர்களை அவர் பாதுகாக்கிறார்.
32 கர்த்தரைத் தவிர வேறு தேவன் கிடையாது.
நமது தேவனைத் தவிர வேறு கன்மலை இல்லை.
33 தேவன் என் அரண்.
அவர் தூயவர்களைச் சரியாக வாழவைக்கிறார்.
34 தேவன் நான் ஒரு மானைப்போல வேகமாக ஓடும்படி செய்கிறார்!
உயரமான இடங்களில் நான் நிலையாக நிற்கும்படி செய்கிறார்.
35 தேவன் என்னைப் போருக்குப் பயிற்சி தருகிறார்.
அதனால் என் கைகள் சக்தி வாய்ந்த அம்புகளைச் செலுத்த முடியும்.
36 தேவனே, நீர் என்னைப் பாதுகாத்தீர்.
எனக்கு வெற்றி அளித்தீர்.
என் பகைவரை நான் வெல்ல உதவினீர்.
37 என் கால்களையும் மூட்டுகளையும் பலப்படுத்தினீர்.
எனவே நான் தடுமாறாமல் வேகமாக நடக்க முடியும்.
38 நான் பகைவர்களை விரட்ட வேண்டும்.
அவர்களை இறுதியில் அழிக்கும்வரை!
அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை நான் திரும்பி வரமாட்டேன்.
39 என் பகைவர்களைத் தோற்கடித்தேன்.
அவர்களை வென்றேன்!
அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.
ஆம், என் பகைவர்கள் என் பாதத்தில் விழுந்தார்கள்.
40 தேவனே நீர் என்னை போரில் வலிமையுடையவன் ஆக்கினீர்.
என் பகைவர்கள் என் முன்னே வந்து விழும்படி செய்தீர்.
41 என் பகைவர்களைத் தலைக்குனிய வைப்பதில் நீர் உதவினீர்,
என் பகைவர்களின் கழுத்தை வெட்டும்படியாக அவர்கள் கழுத்தை என் முன் ஒப்புவித்தீர்!
42 என் பகைவர்கள் உதவிக்கு ஆள் தேடினார்கள்.
ஆனால் யாரும் அவர்கள் உதவிக்கு வரவில்லை.
அவர்கள் கர்த்தரிடம் கூட கேட்டார்கள்.
ஆனால் அவர் அவர்களுக்குப் பதில் அளிக்கவில்லை.
43 என் பகைவர்களைத் துண்டு துண்டாக்கினேன்.
அவர்கள் நிலத்தின் மீது புழுதியானார்கள்.
என் பகைவர்களை நான் சிதறடித்தேன்.
அவர்கள் மீது தெருப்புழுதியென நினைத்து நடந்தேன்.
44 நீர் எனக்கு எதிராக போரிட்டவரிடமிருந்து என்னைக் காத்தீர்.
நீர் அந்தத் தேசங்களை ஆள்பவனாக என்னை ஆக்கினீர்.
எனக்குத் தெரியாதவர்கள் இப்போது எனக்குப் பணி செய்கிறார்கள்!
45 பிற தேசத்தவர் எனக்கு கீழ்ப்படிகின்றார்கள்!
என்னுடைய கட்டளையைக் கேட்கும்போது விரைந்து பணிவிடை செய்கிறார்கள், அயல் நாட்டவர்கள் எனக்குப் பயப்படுகிறார்கள்!
46 அந்த அயல்நாட்டினர் பயத்தால் நடுங்குகிறார்கள்.
பயந்துகொண்டே அவர்களின் மறைவிடங்களிலிருந்து வெளியில் வருகிறார்கள்.
47 கர்த்தர் உயிரோடிருக்கிறார்.
எனது கன்மலையான அவரைத் துதிப்பேன்!
தேவன் உயர்ந்தவர்!
என்னைப் பாதுகாக்கும் ஒரு கன்மலை அவர்.
48 என் பகைவர்களை எனக்காகத் தண்டிக்கும் தேவன் அவர்.
ஜனங்களை என் ஆட்சியின் கீழ் அவர் வைக்கிறார்.
49 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காத்தீர்!
என்னை எதிர்த்தவர்களைத் தோற்றோடச் செய்தீர்.
கொடியவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தீர்!
50 கர்த்தாவே, ஆகையால் எல்லா தேசங்களும் அறியும்படி நாம் உம்மைத் துதிப்பேன்.
எனவே உமது பேரில் நான் பாடல்கள் பாடுகிறேன்.
51 கர்த்தர், தன் அரசன் போரில் வெல்லும்படி செய்கிறார்!
கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு உண்மையான அன்பைக் காட்டுகிறார்.
அவர் தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் எப்போதும் உண்மையாக இருப்பார்!