தேவனுடைய பரிசுத்தப் பெட்டி திருப்பி அனுப்பப்படுகிறது
6
பெலிஸ்தர் தம் நாட்டில் பரிசுத்தப்
பெட்டியை ஏழு மாதங்கள் வைத்திருந்தனர். பெலிஸ்தர் தங்கள் பூசாரிகளையும், மந்திரவாதிகளையும் அழைத்து, “கர்த்தருடைய பெட்டியை என்னச் செய்யலாம்? பெட்டியை எவ்வாறு திருப்பி அனுப்பலாம்” என்று கேட்டனர்.
அதற்கு அவர்கள், “நீங்கள் இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைத் திருப்பி அனுப்புவதானால் வெறுமையாக அனுப்பவேண்டாம். அன்பளிப்போடு அனுப்புங்கள். அப்போது உங்கள் பாவங்களையும் இஸ்ரவேலின் தேவன் எடுத்துப் போடுவார். பின் நீங்களும் குணம் பெறுவீர்கள். நீங்களும் பரிசுத்தம் அடைவீர்கள். இதனைச் செய்தால் தேவன் உங்களைத் தண்டிப்பதையும் நிறுத்துவார்” என்றனர்.
பெலிஸ்தர்கள், “நம்மை மன்னிப்பதற்காக நாம் எத்தகைய காணிக்கைகளை இஸ்ரவேலரின் தேவனுக்குக் கொடுக்கவேண்டும்?” எனக்கேட்டனர்.
அதற்கு பூசாரிகளும், மந்திரவாதிகளும் பதில் சொன்னார்கள். “ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ஆளுநராக, 5 பெலிஸ்திய ஆளுநர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரேவிதமானப் பிரச்சனைதான். எனவே தங்கத்தால் 5 உருவங்களை தோல் கட்டியின் சாயலிலும், 5 சுண்டெலி சாயலிலும் செய்து அனுப்பவேண்டும். எனவே, உங்களை அழித்துக்கொண்டிருக்கும் தோல்கட்டி மற்றும் எலியின் உருவங்களை செய்யுங்கள் அத்தங்க உருவங்களை இஸ்ரவேல் தேவனுக்குக் காணிக்கையாக்குங்கள். பின் இஸ்ரவேலின் தேவன், உங்களையும் உங்கள் தெய்வங்களையும், உங்கள் நாட்டையும் தண்டிப்பதை நிறுத்துவார். எகிப்தியர்களையும் பார்வோனையும் போன்று கடினமனம் உடையவர்களாக இராதீர்கள். தேவன் எகிப்தியர்களைத் தண்டித்தார். எனவேதான் எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களை எகிப்தை விட்டுப் போகும்படி அனுமதித்தனர்.
“இப்போது நீங்கள் ஒரு புது வண்டியைச் செய்யவேண்டும். நுகம்பூட்டாத இரண்டு இளைய பசுக்களைப் பிடித்து வண்டியில் கட்டவேண்டும். அவற்றின் கன்றுக்குட்டிகளை அவற்றின் பின் போகவிடாமல் வீட்டில் கட்டவேண்டும். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அவ்வண்டியில் வைக்கவும். தங்க உருவங்களையும் சிலைகளையும் பெட்டியின் அருகில் பக்கத்தில் பையில் வைக்கவும். இவை உங்கள் பாவங்களை மன்னிக்கும் தேவனுக்கான அன்பளிப்புகளாகும். வண்டியை நேரான வழியில் போகவிடுங்கள். வண்டியைக் கவனியுங்கள். அது நேராக இஸ்ரவேலரின் சொந்த இடமான பெத்ஷிமேசுக்குப் போனால், நமக்கு இந்த நோய்களைத் தந்தவர் கர்த்தர் தான் என அறியலாம். ஒருவேளை பெத்ஷிமேசுக்கு அப்பசுக்கள் நேராகச் செல்லவில்லை என்றால், இஸ்ரவேலரின் தேவன் நம்மைத் தண்டிக்கவில்லை, இந்த நோய் தற்செயலாக வந்தது என்று அறிந்துகொள்ளலாம்” என்றனர்.
10 பெலிஸ்தியர் பூசாரிகளும் மந்திரவாதிகளும் சொன்னபடிச் செய்தனர். அப்போது தான் கன்றுகளை ஈன்ற இரண்டு பசுக்களைக் கண்டார்கள். அந்த இரண்டு பசுக்களை வண்டியில் பூட்டி அதன் கன்று குட்டிகளை வீட்டுத் தொழுவில் கட்டினார்கள். 11 பின் பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை வண்டியில் வைத்தனர். தங்க உருவங்களால் செய்யப்பட்ட தோல்கட்டியையும், சுண்டெலிகளையும் அதன் பக்கத்தில் வைத்தனர். 12 பசுக்கள் நேராக பெத்ஷிமேசுக்குச் சென்றன. அவை நேராகச் சாலையில் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் சென்றன. பெலிஸ்தர்கள் தொடர்ந்து நகர எல்லைவரை பின் சென்றனர்.
13 பெத்ஷிமேசின் ஜனங்கள் தங்கள் கோதுமையை பள்ளத்தாக்கிலே அறுவடை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்தப் பெட்டியைக் கண்டனர். அவர்கள் பெட்டியை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ந்தனர். அதைப் பெற்றுக்கொள்ள ஓடினார்கள். 14-15 பெத்ஷிமேசில் யோசுவாவின் வயலுக்கு வண்டி வந்து பாறைக்கருகில் நின்றது. ஜனங்கள் வண்டி மரங்களைப் பிளந்தனர், பசுக்களைக் கொன்றுக் கர்த்தருக்கு பலியாக செலுத்தினார்கள்.
லேவியர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். தங்க உருவங்கள் இருந்தப் பையையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அவற்றைப் பெரியப் பாறைமீது வைத்தனர். அந்த நாளில் பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருக்கு தகன பலிகளை அளித்தனர்.
16 ஐந்து பெலிஸ்திய அரசர்களும் பெத்ஷிமேசின் ஜனங்கள் செய்வதை எல்லாம் கவனித்தனர். அன்றே அவர்கள் எக்ரோனுக்குத் திரும்பினார்கள்.
17 இவ்வாறு பெலிஸ்தர் தோல் கட்டிகளின் தங்க உருவங்களை தம் பாவங்களுக்கு பரிகாரமாக கர்த்தருக்குக் கொடுத்தனர். ஒவ்வொரு பெலிஸ்திய நகரத்திற்கும் ஒரு உருவம் வீதம் கொடுத்தனர். அவை அஸ்தோத்து, அஸ்கலோன், காத், காசா, எக்ரோன் ஆகியவையாகும். 18 பெலிஸ்தர் சுண்டெலியின் தங்க உருவங்களையும் அனுப்பினார்கள். அவையும் நகர எண்ணிக்கையைப் போலவே இருந்தன. இந்நகரங்களைச் சுற்றிலும் சுவர்களும், நகரங்களைச் சுற்றிலும் கிராமங்களும் இருந்தன.
பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பாறையின் மேல் வைத்தனர். அப்பாறை இன்றும் யோசுவாவின் வயலில் உள்ளது.
19 ஆனால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பார்த்தபோது அங்கே ஆசாரியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே தேவன் பெத்ஷிமேசில் 70 பேரை கொன்றார். பெத்ஷிமேசில் உள்ள ஜனங்கள் இக்கொடுமையான தண்டனைக்காகக் கதறி அழுதனர். 20 அவர்கள் “பரிசுத்தப் பெட்டியைப் பராமரிக்கும் ஆசாரியன் எங்கே இருக்கிறான்? இங்கிருந்து அந்த பெட்டி எங்கே செல்லவேண்டும்?” என்றனர்.
21 கீரியாத்யாரீம் என்ற இடத்தில் ஒரு ஆசாரியன் இருந்தான். அங்குள்ள ஜனங்களுக்கு பெத்ஷிமேசின் ஜனங்கள் தூது அனுப்பினார்கள். தூதுவர்கள், “பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டனர். இதனை உங்கள் நகரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்றனர்.