சவுல் அரசனின் மரணம்
10
1 பெலிஸ்தர்கள், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தோற்று ஓடிப்போனார்கள். கில்போவா மலையில் அவர்கள் வெட்டுண்டு மரித்துப்போனார்கள்.
2 சவுலையும், அவனது மகன்களையும் பெலிஸ்தர்கள் தொடர்ந்து துரத்திக்கொண்டு போனார்கள். அவர்கள், இவர்களைப் பிடித்து கொன்றார்கள். பெலிஸ்தர்கள் சவுலின் மகன்களான யோனத்தான், அபினதாப், மல்கிசூவா ஆகியோரைக் கொன்றனர்.
3 சவுலைச் சுற்றி போர் பலமடைந்தது. வில் வீரர் அவனை அம்பால் எய்து காயப்படுத்தினார்கள்.
4 பிறகு சவுல் அவனது ஆயுதந்தாங்கியிடம், “உனது வாளை எடு. அதனால் என்னைக் கொல். அதனால் அந்த அந்நியர்கள் என்னைக் காயப்படுத்தமாட்டார்கள். அவர்கள் வரும்போது என்னைக் கேலிச் செய்யமாட்டார்கள்” என்றான்.
ஆனால், சவுலின் ஆயுதந்தாங்கி பயந்தான். அவன் சவுலைக் கொல்ல மறுத்தான். பிறகு சவுல், தனது சொந்த வாளையே தன்னைக் கொல்வதற்கு பயன்படுத்தினான்.
5 சவுல் மரித்துப்போனதை ஆயுதந்தாங்கி பார்த்தான். பின் அவனும் தற்கொலை செய்துக்கொண்டான். அவனும் சவுலைப் போலவே தன் வாளின் நுனியிலே விழுந்து மரித்துப் போனான்.
6 இவ்வாறு சவுலும், அவனது மூன்று மகன்களும் மரித்துப்போனார்கள். சவுலின் குடும்பம் முழுவதுமே மொத்தமாக மரித்துப்போனது.
7 அப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் அனைவரும் தமது சொந்த படை ஓடுவதைக் கண்டனர். சவுலும், அவனது மகன்களும் மரித்துப் போனதைக் கண்டனர். எனவே, இவர்கள் தமது நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். இவர்கள் விட்டுப்போன இடங்களில், பெலிஸ்தர்கள் வந்து நுழைந்தனர். அவ்விடங்களிலே பெலிஸ்தர்கள் குடியேறினார்கள்.
8 மறுநாள், பெலிஸ்தர்கள் மரித்துப்போனவர்களின் உடலில் இருந்து விலைமதிப்புடைய பொருட்களை எடுக்கவந்தனர். அப்போது அவர்கள் சவுல் மற்றும் அவனது மகன்களின் உடல்களைக் கில்போவா மலையில் கண்டுபிடித்தனர்.
9 பெலிஸ்தர்கள் சவுலின் உடம்பிலுள்ள சில பொருட்களை எடுத்துக்கொண்டனர். அவர்கள் சவுலின் தலையையும் ஆயுதங்களையும் எடுத்தனர். அவர்கள் தூதுவர்களை அனுப்பி தங்கள் நாடுகளில் உள்ள ஜனங்களுக்கும், பொய்த் தெய்வங்களுக்கும் செய்தியை பரப்பினார்கள்.
10 பெலிஸ்தர்கள், சவுலின் ஆயுதங்களைத் தமது பொய்த் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்தனர். சவுலின் தலையைத் தாகோன் ஆலயத்திலே தொங்கவிட்டனர்.
11 பெலிஸ்தர்கள் சவுலுக்குச் செய்தவற்றைப் பற்றி கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் கேள்விப்பட்டனர்.
12 சவுல் மற்றும் அவனது மகன்களின் உடல்களைக் கைப்பற்ற தைரியமுள்ள கீலேயாத் நாட்டு யாபேசு நகரத்தவர்கள் போனார்கள். அவற்றை எடுத்துவந்தனர். அவர்கள், சவுல் மற்றும் மகன்களின் எலும்புகளை யாபேசில் ஒரு பெரிய மரத்தடியில் அடக்கம்செய்தனர். பின் ஏழு நாட்கள் உபவாசமிருந்தார்கள்.
13 சவுல் கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லாதபடியால் அவன் கொல்லப்பட்டான். சவுல் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
14 அவன் தன் எதிர்காலத்தைப் பற்றி கர்த்தரிடம் கேட்பதற்குப் பதிலாக குறி சொல்வோரை நாடினான். அதனால்தான் கர்த்தர் அவனைக் கொன்று ஆட்சியை ஈசாயின் மகனான தாவீதிடம் தந்தார்.