92
ஓய்வு நாளின் துதிப்பாடல்
மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது.
உமது நாமத்தைத் துதிப்பது நல்லது.
காலையில் உமது அன்பைப்பற்றியும்
இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது.
தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும்,
இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.
கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர்.
அக்காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம்.
கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர்.
உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது.
உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள்.
நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம்.
களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள்.
அவர்கள் செய்யும் பயனற்ற காரியங்களே என்றென்றும் அழிக்கப்படும்.
ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர்.
கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
தீயவை செய்யும் எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள்.
10 ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர்.
பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன்.
விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர்.
உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர்.
11 என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன்.
என்னைத் தாக்க வருகிற பெருங்காளைகளைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துச் சொல்பவற்றை நான் கேட்கிறேன்.
12-13 செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான்.
லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான்.
கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள்.
தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.
14 வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள்.
அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள்.
15 கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள்.
அவர் என் பாறை அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.