28
தாவீதின் ஒரு பாடல்
1 கர்த்தாவே, நீர் என் பாறை.
உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும்.
உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
2 கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன்.
உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும்.
3 கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும்.
“ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள்.
ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள்.
4 கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள்.
எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும்.
அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும்.
5 கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை.
தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.
6 கர்த்தரைத் துதிப்பேன்,
இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
7 கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம்.
அவரை நம்பினேன்.
அவர் எனக்கு உதவினார்.
நான் மிகவும் மகிழ்கிறேன்!
அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
8 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார்.
கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.
9 தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும்.
உமது ஜனங்களை ஆசீர்வதியும்!
அவர்களை வழி நடத்தி என்றென்றும்Ԕ கனப்படுத்தும்!