ஜனங்களின் தீயத்திட்டங்கள்
2
பாவம் செய்யத் திட்டமிட்டிருந்த ஜனங்களுக்குத்
துன்பங்கள் வரும்.
அந்த ஜனங்கள் தம் படுக்கையில் கிடந்த வண்ணம் தீய திட்டங்களைத் தீட்டினார்கள்.
பிறகு காலை வெனிச்சம் வந்ததும் தங்களது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர்.
ஏனென்றால், அவர்களுக்குத் தாங்கள் விரும்பியதைச் செய்யும் வல்லமை இருந்தது.
அவர்கள் வயல்களை விரும்பினார்கள்,
எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் வீடுகளை விரும்பினார்கள்,
அதை எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது வீட்டை எடுத்தனர்.
அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது நிலத்தை எடுத்தனர்.
அந்த ஜனங்களைத் தண்டிக்கக் கர்த்தருடைய திட்டங்கள்
அதனால், கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்:
“பார், நான் இந்தக் குடும்பத்திற்கு எதிராக துன்பத்தைக் கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
நீங்கள் வீண் பெருமைகொள்வதை விடுவீர்கள்.
ஏனென்றால் தீமைகள் வந்துகொண்டிருக்கின்றன.
பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பாட்டு இயற்றுவார்கள்.
ஜனங்கள் இந்தச் சோகப் பாடலைப் பாடுவார்கள்:
நாங்கள் அழிக்கப்படுகிறோம்.
கர்த்தர் எங்களது நிலத்தை எடுத்துக் அதனை மற்றவர்களுக்குக் கொடுத்தார்.
ஆமாம், அவர் எனது நிலங்களை என்னிடமிருந்து எடுத்தார்.
கர்த்தர் நமது வயல்களைப் பகைவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்.
எனவே நாம் நிலத்தை அளந்து, கர்த்தருடைய
ஜனங்களுக்குள் பகிர்ந்துக்கொள்ள இயலாது.”
பிரசங்கம் செய்ய வேண்டாம் என மீகா கேட்டுக்கொள்ளப்படுகிறான்
ஜனங்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டாம்.
எங்களைப் பற்றிய அந்தத் தீயவற்றைச் சொல்லவேண்டாம்.
எங்களுக்குத் தீயவை எதுவும் ஏற்படாது”
ஆனால் யாக்கோபின் ஜனங்களே,
நான் இவற்றை கட்டாயம் சொல்ல வேண்டும்.
கர்த்தர் அவரது பொறுமையை இழந்துக்கொண்டிருக்கிறார்.
ஏனென்றால் நீங்கள் தீமை செய்திருக்கிறீர்கள்.
நீங்கள் சரியானபடி வாழ்ந்தால்
பிறகு நான் உங்களிடம் இனிமையாகப் பேசமுடியும்.
ஆனால் என் ஜனங்களுக்கு, அவர்கள் விரோதியைப்போல் ஆகிறார்கள்.
நீங்கள் கடந்து செல்லுகிறவர்களின் ஆடைகளைக் களவாடுகிறீர்கள்.
அந்த ஜனங்கள் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் அவர்களிடமிருந்து யுத்தத்தின் கைதிகளிடமிருந்து எடுப்பது போல பொருள்களைப் பறித்துக்கொள்கிறீர்கள்.
நீங்கள் எனது ஜனங்களிலுள்ள பெண்களிடமிருந்து
அழகான வீடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் எனது செல்வத்தை
அவர்களின் சிறிய பிள்ளைகளிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
10 எழுங்கள், புறப்பட்டுப்போங்கள்.
இது நீங்கள் ஓய்வெடுக்கும் இடமாக இராது. ஏனென்றால், இந்த இடத்தை நீங்கள் அழித்தீர்கள்.
இதனை நீங்கள் அசுத்தம் செய்தீர்கள். எனவே, இது அழிக்கப்படும்.
இது பயங்கரமான அழிவாக இருக்கும்.
11 இந்த ஜனங்கள், நான் சொல்வதைக் கேட்க விரும்புவதில்லை.
ஆனால் ஒருவன் பொய்களைச் சொல்லிக்கொண்டு வந்தால், அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அவர்கள் ஒரு பொய் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொண்டு, அவன் வந்து,
“அப்பொழுது வருங்காலம் நல்லகாலமாக தோன்றும், திராட்சைரசமும் மதுபானமும் ஏராளமாக கிடைக்கும்” என்று சொன்னதும் அவனையும் ஏற்றுக்கொள்வார்கள்.
கர்த்தர் தனது ஜனங்களை ஒன்று சேர்ப்பார்
12 ஆமாம், யாக்கோபின் ஜனங்களே,
நான் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன்.
இஸ்ரவேலின் தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரையும் நான் ஒன்று சேர்ப்பேன்.
நான் அவர்களை ஆட்டு மந்தையில் உள்ள ஆடுகளைப்போன்றும்
தொழுவத்தில் உள்ள மந்தைகளைப்போன்றும்
ஒன்று சேர்ப்பேன்.
பிறகு அந்த இடமானது அநேக ஜனங்களின் ஓசைகளால் நிறைந்திருக்கும்.
13 “தடைகளை உடைப்பவர்” அவர்களை நடத்தி அவர்கள் முன்னே நடந்து செல்கிறார்.
அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் நுழைந்து கடந்து போவார்கள்.
அவர்களின் அரசன் அவர்களின் முன்பு நடந்து போவான்.
கர்த்தர் அவரது ஜனங்களுக்கு முன்னால் இருப்பார்.