தானியக் காணிக்கைகள்
2
“ஒருவன் தேவனாகிய கர்த்தருக்கு தானியத்தைக் காணிக்கையாகக் கொடுக்க விரும்பினால், அவன் மிருதுவான மாவைப் பயன்படுத்த வேண்டும். அந்த மாவில் எண்ணெய் ஊற்றி அதன்மேல் சாம்பிராணியைப் போடவேண்டும். பிறகு அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடம் கொண்டு வரவேண்டும். எண்ணெயும் தூபவர்க்கமும் கலந்த அந்த மிருதுவான மாவில் இருந்து ஆசாரியன் கைப்பிடியளவு எடுத்து, பலிபீடத்தில் வைத்து அதனை எரிக்க வேண்டும். இது நெருப்பினால் செய்யப்படுகிற காணிக்கை ஆகும். இதன் வாசனை கர்த்தருக்குப் பிடித்தமானதாக இருக்கும். மிஞ்சின தானியமானது ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொந்தமாகும். கர்த்தருக்காக செய்யப்படுகிற இந்த தகன பலியானது மிகவும் பரிசுத்தமானது.
வேகவைத்த தானியக் காணிக்கைகள்
“ஒருவன் அடுப்பில் வேகவைத்த தானியப் பொருட்களை காணிக்கை செலுத்த விரும்பினால் அது புளிப்பில்லா அப்பமாக இருக்க வேண்டும். அதுவும் மிருதுவான மாவை எண்ணெயிலே பிசைந்து செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அப்பங்களாக இருக்க வேண்டும். தட்டையான சட்டியில் சமைத்துப் பக்குவம் செய்த பலகாரத்தை நீ தானியக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால் அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மிருதுவான மாவினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதைத் துண்டு துண்டாக உடைத்து அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும். இது தானியக் காணிக்கை ஆகும். நீ பொரிக்கும் சட்டியில் பாகம் செய்யப்பட்ட பலகாரத்தை தானியக் காணிக்கையாக செலுத்த விரும்பினால் அது மிருதுவான மாவிலே எண்ணெய் பிசைந்து செய்யப்பட்டதாக இருக்கட்டும்.
“இத்தகைய தானியக் காணிக்கையை நீ கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். அதனை ஆசாரியனிடம் கொடுத்தால் அவன் அவற்றைப் பலிபீடத்தின்மேல் வைப்பான். பின்பு, ஆசாரியன் தானியக் காணிக்கையின் ஒரு பாகத்தை எடுத்து பலி பீடத்தில் ஞாபகக் காணிக்கையாக எரிப்பான். இக்காணிக்கை நெருப்பில் இடப்பட வேண்டும். இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும். 10 மீதியுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும் அவனது மகன்களுக்கும் உரியதாகும். கர்த்தருக்காக செய்யப்படும் தகனங்களில் இது மிகவும் பரிசுத்தமானதாகும்.
11 “புளித்த மாவினால் செய்யப்பட்ட எந்த தானியப் பொருட்களையும், தேனால் செய்யப்பட்ட எந்தப் பொருட்களையும் கர்த்தருக்குக் காணிக்கையாக எரிக்கக் கூடாது. 12 நீ முதல் அறுவடையிலிருந்து புளிப்பில்லாத அப்பத்தையும் அல்லது தேனையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வரலாம். ஆனால் அதனைப் பலிபீடத்தின் மேல் இனிய வாசனையாக எரிக்க கூடாது. 13 நீ கொண்டு வருகிற எல்லா தானியக் காணிக்கைப் பொருட்களிலும் உப்பு சேர்ந்திருக்கட்டும். உன் தேவனின் உடன்படிக்கையில் உப்பை உன் தானியக் காணிக்கையில் குறைய விடாமல் பார்த்துக்கொள். உன் எல்லாக் காணிக்கைகளோடும் நீ உப்பைக் கொண்டுவர வேண்டும்.
முதல் அறுவடையிலிருந்து தானியக் காணிக்கை
14 “நீ முதல் அறுவடையிலிருந்து தானியங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வரும்போது, புதிய பச்சையான கதிர்களை நெருப்பால் வாட்டி உதிர்த்து கொண்டு வரவேண்டும். இதுவே உன் முதல் அறுவடையின் தானியக் காணிக்கையாகும். 15 அதன் மேல் நீ எண்ணெயையும், சாம்பிராணியையும் போட வேண்டும். இது தானியக் காணிக்கை. 16 ஆசாரியன் இதில் ஒரு பகுதியை எடுத்து ஞாபகார்த்தக் காணிக்கையாகப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். இது கர்த்தருக்காக செய்யப்படும் தகனபலி ஆகும்.