தேவனுடைய வாக்குறுதி
33
1 கர்த்தரிடமிருந்து வார்த்தை இரண்டாவது முறையாக எரேமியாவிற்கு வந்தது. எரேமியா இன்னும் காவல் முற்றத்தில் சிறைபட்டிருக்கிறான்.
2 “கர்த்தர் பூமியைச் செய்தார், அவர் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். கர்த்தர் என்பது அவரது நாமம். கர்த்தர் கூறுகிறார்:
3 ‘யூதாவே, என்னிடம் ஜெபம் செய். நான் பதில் கூறுவேன். நான் முக்கியமான இரகசியங்களைக் கூறுவேன். நீ இதற்கு முன் இப்படிப்பட்ட காரியத்தை கேட்டதில்லை.’
4 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எருசலேமில் உள்ள வீடுகளைப்பற்றியும் யூதாவிலுள்ள அரசர்களின் அரண்மனைகளைப்பற்றியும் கூறுகிறார்: ‘பகைவர்கள் அவ்வீடுகளை இடித்துத் தள்ளுவார்கள். நகரச்சுவர்களில் உயரமான எடுசுவர்களைக் கட்டுவார்கள். பகைவர்கள் வாள்களைப் பயன்படுத்துவார்கள். இந்நகரங்களில் உள்ள ஜனங்களோடு சண்டையிடுவார்கள்.
5 “‘எருசலேமில் உள்ள ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றனர். நான் அந்த ஜனங்கள் மீது கோபமாக இருக்கிறேன். நான் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறேன். எனவே நான் அங்கே பலப்பல ஜனங்களைக் கொல்வேன். பாபிலோனிய படை எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும். எருசலேமின் வீடுகளில் பற்பல மரித்த உடல்கள் கிடக்கும்.
6 “‘ஆனால் பிறகு அந்நகரில் உள்ள ஜனங்களை நான் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்). அந்த ஜனங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படிச் செய்வேன்.
7 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களை மீண்டும் கொண்டுவருவேன். அந்த ஜனங்களை முன்புபோல பலமுள்ளவர்களாகச் செய்வேன்.
8 அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஆனால் நான் அப்பாவத்தைக் கழுவுவேன். அவர்கள் எனக்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களை நான் மன்னிப்பன்.
9 எருசலேம் ஒரு அற்புதமான இடமாகும். ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களும் அதனைப் புகழுவார்கள். அந்த ஜனங்கள் அங்கே நல்லவை நடைபெறுவதைப் பற்றிக் கேள்விப்படும்போது இது நிகழும். எருசலேமிற்காக நான் செய்துக்கொண்டிருக்கும் நல்லவற்றைப்பற்றி அவர்கள் கேட்பார்கள்.’
10 “‘நமது நாடு வெறுமையான வனாந்தரமாக இருக்கிறது. அங்கே ஜனங்களோ மிருகங்களோ வாழவில்லை’ என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எருசலேம் தெருக்களும் யூதா நகரங்களும் இப்போது அமைதியாக இருக்கின்றன. ஆனால் விரைவில் அங்கு ஆரவாரம் ஏற்படும்.
11 அங்கே மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரிய ஓசைகள் கேட்கும். அங்கு மணமகள் மற்றும் மணமகனின் மகிழ்ச்சிகரமான ஓசை கேட்கும். கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் காணிக்கைகளைக் கொண்டு வரும் ஓசை கேட்கும். அந்த ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய தயவு என்றென்றும் தொடரும்’ என்று கூறுவார்கள். ஜனங்கள் இதனைக் கூறுவார்கள். ஏனென்றால் நான் மீண்டும் யூதாவிற்கு நல்லவற்றைச் செய்வேன். இது தொடக்கத்தைப்போன்று இருக்கும்.” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
12 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “இந்த இடம் இப்போது காலியாக இருக்கிறது. அங்கே மனிதர்களோ மிருகங்களோ வாழவில்லை. ஆனால், யூதாவின் எல்லா நகரங்களிலும் ஜனங்கள் இருப்பார்கள். அங்கு மேய்ப்பர்கள் இருப்பார்கள். மந்தைகள் ஓய்வு கொள்கிற மேய்ச்சல் நிலங்கள் இருக்கும்.
13 மேய்ப்பர்கள் தம் ஆடுகளை அவை அவர்கள் முன்பு இருக்கும்போது எண்ணுகின்றனர். ஜனங்கள் தம் ஆடுகளை நாட்டைச் சுற்றிலும் மலைநாட்டிலும் மேற்கு மலை அடிவாரங்களிலும் நெகேவிலும் யூதாவின் மற்ற நகரங்களிலும் எண்ணுவார்கள்” என்று கூறுகிறார்.
நல்ல கிளை
14 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களுக்கு விசேஷ வாக்குறுதியைச் செய்தேன். நான் வாக்குறுதி அளித்த காரியங்களை நிறைவேற்றும் நேரம் வந்துக்கொண்டிருக்கிறது.
15 அந்த நேரத்தில், தாவீதின் குடும்பத்திலிருந்து ஒரு நல்ல ‘கிளை’ வளரும்படிச் செய்வேன். அந்த நல்ல ‘கிளை’ தேசத்திற்கு நல்லதும் சரியானதுமானவற்றைச் செய்யும்.
16 அந்தக் கிளை இருக்கும்போது யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள். ஜனங்கள் எருசலேமில் பாதுகாப்பாக வாழ்வார்கள். அக்கிளையின் பெயர்: ‘கர்த்தர் நல்லவர்’”
17 கர்த்தர் கூறுகிறார், “தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவனே எப்பொழுதும் சிங்காசனத்தில் இருந்து இஸ்ரவேல் குடும்பத்தை ஆள்வான்.
18 லேவியின் வம்சத்திலிருந்தே எப்போதும் ஆசாரியர்கள் இருப்பார்கள். அந்த ஆசாரியர்கள் எப்பொழுதும் எனக்கு முன்னால் நின்று தகனபலியையும் தானியக் காணிக்கைகளையும், பலிகளையும் கொடுப்பார்கள்.”
19 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தது.
20 கர்த்தர் கூறுகிறார்: “பகலோடும் இரவோடும் நான் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறேன். அவை என்றென்றும் தொடர்ந்து இருக்கும் என நான் ஒப்புக்கொண்டேன். அந்த உடன்படிக்கையை உன்னால் மாற்ற முடியாது. இரவும் பகலும் எப்பொழுதும் சரியான நேரத்தில் வரும். நீ அந்த உடன்படிக்கையை மாற்ற முடியுமானால்
21 பிறகு நீ நான் தாவீது மற்றும் லேவியோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையை மாற்ற முடியும். பிறகு தாவீதின் சந்ததியார் அரசனாகமாட்டார்கள். லேவியின் சந்ததியார் ஆசாரியானாகமாட்டார்கள்.
22 ஆனால் நான் எனது வேலையாள் தாவீதிற்கு நிறைய சந்ததிகளைக் கொடுப்பேன். லேவியின் கோத்திரத்திற்கும் கொடுப்பேன். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போன்று நிறைய இருப்பார்கள். அத்தனை நட்சத்திரங்களையும் எவராலும் எண்ண முடியாது. அவர்கள் கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமாக இருப்பார்கள். அம்மணல் துண்டுகளை எவராலும் எண்ண முடியாது” என்கிறார்.
23 கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான்:
24 “எரேமியா, ஜனங்கள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தாயா? அந்த ஜனங்கள் சொல்லுகிறார்கள். ‘கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதா என்னும் வம்சங்களை விட்டு திரும்பிவிட்டார். அந்த ஜனங்களை கர்த்தர் தேர்ந்தெடுத்தார். ஆனால், இப்போது அவர் அதனைத் தேசமாக ஏற்றுக்கொள்ளவில்லை நிராகரித்துவிட்டார்.’”
25 கர்த்தர் சொல்லுகிறார்: “இரவுடனும் பகலுடனும் நான் கொண்ட உடன்படிக்கை தொடராவிட்டால், வானத்திற்கும் பூமிக்குமுள்ள சட்டங்களை நான் அமைக்காவிட்டால், பிறகு நான் அந்த ஜனங்களை விட்டு விலகலாம்.
26 பிறகு, யாக்கோபின் சந்ததிகளிடமிருந்து நான் ஒருவேளை விலகலாம். ஒருவேளை ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததிகயையும் தாவீதின் சந்ததிகயையும் அனுமதிக்கமாட்டேன். ஆனால் தாவீது எனது தாசன். நான் அந்த ஜனங்களிடம் தயவோடு இருப்பேன். அந்த ஜனங்களுக்கு மீண்டும் நல்லவை ஏற்படச் செய்வேன்.”