யெப்தாவும் எப்பிராயீமும்
12
எப்பிராயீம் கோத்திரத்தின் மனிதர்கள் தம் வீரர்கள் எல்லோரையும் ஒருங்கே அழைத்து நதியைக் கடந்து சாபோன் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யெப்தாவிடம், “அம்மோனிய ஜனங்களை எதிர்த்து நீங்கள் போரிடும்போது ஏன் எங்களை அழைக்கவில்லை? உங்களையும் உங்கள் வீட்டையும் நாங்கள் எரித்துப்போடுவோம்” என்றனர்.
யெப்தா அவர்களுக்குப் பதிலாக, “அம்மோனிய ஜனங்கள் நமக்குத் தொல்லை தந்து கொண்டே இருந்தனர். எனவே நானும் எனது ஜனங்களும் அவர்களுக்கெதிராகப் போர் செய்தோம். நான் உங்களை அழைத்தேன். ஆனால் நீங்கள் எங்களுக்கு உதவ வரவில்லை. நீங்கள் எங்களுக்கு உதவ வரமாட்டீர்கள் என்பதை நான் கண்டேன். எனவே நான் எனது உயிரைப் பணயம் வைத்து, நதியைக் கடந்து அம்மோனிய ஜனங்களோடு போரிடுவதற்குச் சென்றேன். அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் எனக்கு உதவினார். இப்போது ஏன் என்னை எதிர்த்துப் போரிட இன்றைக்கு வந்திருக்கிறீர்கள்?” என்றான்.
அப்போது யெப்தா கீலேயாத்தின் மனிதர்களை ஒருங்கே அழைத்தான் எப்பிராயீம் கோத்திரத்தின் மனிதர்களை எதிர்த்து அவர்கள் போரிட்டனர். எப்பிராயீம் ஜனங்கள் கீலேயாத் ஜனங்களை அவமானப்படுத்தியதால் அவர்கள் எப்பிராயீம் ஜனங்களோடு போர் செய்தனர். அவர்கள், “கீலேயாத்தின் மனிதர்களாகிய நீங்கள் எப்பிராயீம் மனிதர்களிலிருந்து பிரிந்து போனவர்கள்தான், உங்களுக்கென சொந்தமான தேசம் எதுவும் கிடையாது. உங்களில் சிலர் எப்பிராயீமையும், மற்றும் சிலர் மனாசேயையும் சேர்ந்தவர்கள்” என்று சொல்லியிருந்தனர். கீலேயாத்தின் மனிதர்கள் எப்பிராயீமின் மனிதர்களைத் தோற்கடித்தனர்.
கீலேயாத்தின் ஆட்கள் யோர்தான் நதியை ஜனங்கள் கடக்கின்ற எல்லா பகுதிகளையும் கைப்பற்றினார்கள். அப்பகுதிகள் எப்பிராயீம் நாட்டிற்குச் செல்லும் வழியில் இருந்தன. எப்பிராயீமிலிருந்து ஓடிப்போனவன் நதிக்கு வந்து, “என்னை நதியைக் கடக்க விடுங்கள்” என்று சொன்னால் கீலேயாத்தின் மனிதர்கள், “நீ எப்பிராயீமைச் சேர்ந்தவனா?” என்று கேட்பார்கள். அவன் “இல்லை” என்று சொன்னால், அவர்கள், “‘ஷிபோலேத்’ என்று சொல்லு” என்பார்கள். எப்பிராயீம் மனிதரால் அந்த வார்த்தையைச் சரியாக உச்சரிக்க முடியாமல் அவர்கள் அதை, “சிபோலேத்” என்றனர். ஒருவன் “சிபோலேத்” என்று கூறினால் அவன் எப்பிராயீமைச் சேர்ந்தவன் என்று கண்டு, கீலேயாத் மனிதர்கள் நதியைக் கடக்கும் இடத்தில் அவனைக் கொன்றுவிடுவார்கள். எப்பிராயீம் ஆட்களில் 42,000 பேரை இவ்வாறு கொன்றார்கள்.
யெப்தா ஆறு வருட காலம் இஸ்ரவேலருக்கு நியாயாதிபதியாக இருந்தான். கீலேயாத்தைச் சேர்ந்த யெப்தா மரித்தான். யெப்தாவை கீலேயாத்திலுள்ள அவனது நகரில் அடக்கம் செய்தனர்.
நியாயாதிபதியாகிய இப்சான்
யெப்தாவுக்குப் பின்பு இப்சான் என்னும் பெயருள்ளவன் இஸ்ரவேலருக்கு நீதி பதியானான். இப்சான் பெத்லகேம் நகரத்தைச் சேர்ந்தவன். இப்சானுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தனர். அவனுக்கு உறவினரல்லாத 30 பேரைத் திருமணம் செய்யுமாறு அவன் தனது மகள்களுக்குக் கூறினான். அவன் உறவினரல்லாத 30 பெண்களைத் தேர்ந்தெடுத்தான். அவனது மகன்கள் அவர்களைத் திருமணம் செய்தனர். இப்சான் 7 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான். 10 பின் இப்சான் மரித்தான். அவன் பெத்லகேம் நகரில் அடக்கம் செய்யப்பட்டான்.
நியாயாதிபதியாகிய ஏலோன்
11 இப்சானுக்குப் பின் இஸ்ரவேலருக்கு ஏலோன் என்பவன் நீதிபதியாக இருந்தான். ஏலோன் செபுலோன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் 10 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான். 12 பின் செபுலோன் கோத்திரத்தானாகிய ஏலோன் மரித்தான். அவனை செபுலோனிலுள்ள ஆயலோனில் அடக்கம் செய்தனர்.
நியாயாதிபதியாகிய அப்தோன்
13 ஏலோன் மரித்த பின்பு இல்லேலின் மகனாகிய அப்தோன் இஸ்ரவேலருக்கு நீதிபதியானான். அவன் பிரத்தோன் நகரத்தைச் சேர்ந்தவன். 14 அவனுக்கு 40 மகன்களும் 30 பேரன்களும் இருந்தனர். அவர்கள் 70 கழுதைகளில் ஏறி சவாரி வந்தனர். அப்தோன் 8 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான். 15 பின் இல்லேனின் மகனாகிய அப்தோன் மரித்தான். அவன் பிரத்தோன் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பிரத்தோன் எப்பிராயீம் தேசத்தில் இருந்தது. இது அமலேக்கியர் வாழ்ந்த மலைநாட்டில் இருந்த நகரமாகும்.