ஞானம் உன்னை விபச்சாரத்திலிருந்து காக்கும்
7
1 என் மகனே! எனது வார்த்தைகளை நினைவுப்படுத்திக்கொள். நான் உனக்குத் தந்த கட்டளைகளை மறக்காதே.
2 எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. உனக்கு வாழ்வு கிடைக்கும். உனது வாழ்க்கையில் எனது போதனைகளை மிக முக்கியமானதாக வைத்துக்கொள்.
3 எனது போதனைகளையும் கட்டளைகளையும் நீ எப்பொழுதும் உன்னோடேயே வைத்திரு. அவற்றை உன் விரல்களைச் சுற்றி அணிந்துகொள். அவற்றை உன் இதயத்தில் எழுதிக்கொள்.
4 ஞானத்தை உன் சகோதரியைப் போன்று நடத்து. புரிந்துகொள்ளுதலை உன் குடும்பத்திலுள்ள ஒரு பாகமாக நினைத்துக்கொள்.
5 அப்போது அவை உன்னை அந்நிய பெண்களிடமிருந்து காப்பாற்றும். பாவத்துக்கு வழிநடத்திச் செல்லும் பிறபெண்களின் மென்மையான வார்த்தைகளிலிருந்து உன்னைக் காக்கும்.
6 ஒரு நாள் ஜன்னல் வழியே நான் வெளியே பார்த்தேன்.
7 பல முட்டாள் இளைஞர்களையும் பார்த்தேன். அவர்களில் ஒரு இளைஞன் மிகவும் அறிவீனனாக இருந்தான்.
8 அவன் ஒரு மோசமான பெண்ணின் வீடு இருக்கும் தெருவுக்குப் போனான். அவன் அவளது வீட்டின் அருகில் போனான்.
9 அது ஏறக்குறைய இருட்டும் நேரம். சூரியன் மறைந்து, இரவு தொடங்கிவிட்டது.
10 அந்தப் பெண் அவனைச் சந்திக்க வெளியே வந்தாள். அவள் ஒரு வேசியைப்போன்று ஆடையணிந்திருந்தாள். அவள் அவனோடு பாவம் செய்யத் திட்டமிட்டாள்.
11 அவள் அடங்காதவளாகவும் எதிர்ப்பவளாகவும் இருந்தாள். அவள் எப்பொழுதும் வீட்டில் தங்குவதில்லை.
12 அதனால் அவள் தெருக்களில் நடந்து அலைவாள். பிரச்சனைக்காக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.
13 அவள் அந்த இளைஞனைத் தழுவி முத்தமிட்டாள். அவள் வெட்கமில்லாமல்,
14 “என்னிடம் சமாதானப் பலிகளின் விருந்து உள்ளது. நான் கொடுப்பதாக வாக்களித்தவற்றைக் கொடுத்துவிட்டேன்.
15 இன்னும் என்னிடம் விருந்து மீதமுள்ளது. எனவே, என்னோடு உன்னைச் சேர்த்துக்கொள்ள அழைப்பதற்காக வெளியே வந்துள்ளேன். நான் உனக்காகவே காத்துக்கொண்டிருந்தேன். இப்போது நான் உன்னைக் கண்டு பிடித்தேன்.
16 என் படுக்கையின்மேல் சுத்தமான விரிப்பை விரித்துள்ளேன். அது எகிப்திலுள்ள அழகான விரிப்பு.
17 நான் என் படுக்கையின் மேல் மணப்பொருட்களைத் தூவியுள்ளேன். வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கப்பட்டை ஆகியவற்றால் என் படுக்கையை மணம் வீசச்செய்திருக்கிறேன்.
18 வா, நாம் விடியும் வரை அன்போடு சேர்ந்திருப்போம். இரவு முழுவதும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு இருப்போம்.
19 என் கணவன் வெளியே சென்றிருக்கிறான். அவன் வியாபாரத்திற்காகத் தூரதேசங்களுக்குச் சென்றிருக்கிறான்.
20 அவன் நீண்ட பயணத்துக்குப் போதுமான பணத்தை எடுத்துப் போயிருக்கிறான். அவன் இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்கு வரமாட்டான்” என்றாள்.
21 அவள் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி அந்த இளைஞனுக்கு ஆசைகாட்டினாள். அவளது மென்மையான வார்த்தைகள் அவனைத் தூண்டின.
22 அந்த இளைஞன் அவளது வலைக்குள் விழுந்தான். பலியிடப்போகும் காளையைப் போன்று அவன் சென்றான். அவன் வலையை நோக்கிப்போகும் மானைப்போன்று சென்றான்.
23 வேட்டைக்காரன் அந்த மானின் நெஞ்சில் அம்பை வீசத்தயாராக இருந்தான். அவன் வலைக்குள் பறந்துபோகும் பறவையைப்போன்று இருந்தான். அவன் தனக்கு வரப்போகும் ஆபத்தை அறிந்துகொள்ளவில்லை.
24 மகன்களே! இப்போது கவனியுங்கள். நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்.
25 ஒரு மோசமான பெண் உன்னை அழைத்துச் செல்லும்படி வைத்துக்கொள்ளாதே. அவளது வழிகளை பின்பற்றிச் செல்லாதே.
26 பல ஆண்கள் விழுவதற்குக் காரணமாக அவள் இருந்திருக்கிறாள். அவள் பல ஆண்களை அழித்திருக்கிறாள்.
27 அவளது வீடு மரணத்திற்குரிய இடமாகும். அவளது பாதையானது மரணத்திற்கு நேரடியாக அழைத்துப்போகும்.