சாலொமோனிடமிருந்து மேலும் ஞானமொழிகள்
25
1 இது சாலொமோன் சொன்ன மேலும் சில ஞானமொழிகள். இவ்வார்த்தைகள் யூதாவின் அரசனான எசேக்கியா என்பவனின் வேலைக்காரர்கள் பார்த்து எழுதியவை.
2 நாம் அறிந்துகொள்ளக் கூடாது என்று தேவன் எண்ணும் காரியங்களை மறைத்து வைக்கும் உரிமை தேவனுக்கு உண்டு. ஆனால் தான் சொல்லும் காரியங்களுக்காக ஒரு அரசன் பெருமைக்குரியவன் ஆகிறான்.
3 வானம் நமக்கு மேலே மிகவும் உயரத்தில் உள்ளது. பூமியில் ஆழங்கள் உள்ளன. இது போலவே அரசனுடைய மனமும் உள்ளது. இவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.
4 நீ வெள்ளியிலிருந்து கசடுகளையும் அசுத்தங்களையும் நீக்கிவிட்டால், அதைக் கொண்டு ஒரு தொழிலாளியால் நல்ல அழகான பொருட்களைச் செய்யமுடியும்.
5 இதுபோலவே, ஒரு அரசனிடமிருந்து தீய ஆலோசகர்களை நீக்கிவிட்டால், நன்மை அவனது ஆட்சியை வலிமையுள்ளதாக்கும்.
6 அரசனுக்கு முன்னால் உன்னைப்பற்றிப் பெருமை பேசாதே. நீ புகழ்பெற்றவன் என்றும் கூறாதே.
7 அரசன் உன்னை அவனாக வரவழைப்பதுதான் மிக நல்லது. ஆனால் நீயாகப் போனால் மற்றவர்கள் முன்பு நீ அவமானப்பட்டுப் போவாய்
8 நீ உன் கண்ணால் பார்த்ததை நீதிபதியிடம் சொல்ல அவசரப்படாதே. வேறு ஒருவன் நீ சொல்வது தவறென்று நிரூபித்துவிட்டால் பிறகு நீ அவமானப்படுவாய்.
9 நீயும் இன்னொருவனும் ஒத்துப்போகாவிட்டால் இனி என்ன செய்யலாம் என்பதை உங்களுக்குள் பேசி முடிவுசெய். அடுத்தவனின் இரகசியத்தை வெளியில் கூறாதே.
10 நீ அவ்வாறு செய்தால், பிறகு அவமானப்படுவாய். அதற்குப் பிறகு உன் அவப் பெயர் எப்போதும் நீங்காது.
11 நீ சரியான நேரத்தில் சரியானதைக் கூறுவது, தங்க ஆப்பிளை வெள்ளித் தட்டில் வைப்பதுபோன்றது.
12 ஞானமுள்ளவன் உன்னை எச்சரித்தால், அது தங்க மோதிரங்களைவிடவும், சுத்தமான தங்கத்தால் செய்த நகைகளைவிடவும் மதிப்புள்ளது.
13 நம்பிக்கைக்குரிய தூதுவன் அவனை அனுப்பியவனுக்குப் பயனுள்ளவனாக இருப்பான். அவன் வேனிற்கால அறுவடையின்போது கிடைக்கும் குளிர்ந்த தண்ணீரைப் போன்றவன்.
14 சிலர் அன்பளிப்பு கொடுப்பதாக வாக்குறுதி தருவார்கள். ஆனால் அவற்றைத் தரமாட்டார்கள். இவர்கள் மழை தராத மேகமும் காற்றும் போன்றவர்கள்.
15 பொறுமையான பேச்சு யாருடைய சிந்தனையையும் மாற்ற வல்லது. அது அரசனையும் மாற்றும் மென்மையான பேச்சு மிகுந்த வலிமை உடையது.
16 தேன் நல்லது. ஆனால் அதை அதிகம் உண்ணாதே. அவ்வாறு செய்தால் நீ வியாதிக்குள்ளாவாய்.
17 இதுபோலவே உனது அயலான் வீட்டிற்கு அடிக்கடிப் போகாதே. அவ்வாறு செய்தால் அவன் உன்னை வெறுக்கத் துவங்குவான்.
18 உண்மையைச் சொல்லாதவன் ஆபத்தானவன். அவன் தண்டாயுதத்திற்கும் வாளுக்கும் கூர்மையான அம்புக்கும் சமமானவன்.
19 துன்ப காலத்தில் பொய் சொல்பவனை நம்பி இருக்காதே. வலி கொடுக்கும் பல்லைப் போன்றும், வாதத்தால் சூம்பிய காலைப் போன்றும் அவன் இருப்பான். அவனது தேவை வரும்போது துன்புறுத்துவான்.
20 வருத்தத்தோடு இருக்கிறவன் முன்னால் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடுவது ஒருவன் குளிரால் வருந்தும்போது ஆடையைப் பறிப்பது போன்றதாகும். அது வெடிப்பின் மேல் காடியைக் கலப்பது போன்றது ஆகும்.
21 உன் எதிரி பசியோடு இருந்தால் அவனுக்கு உணவு கொடு. உன் எதிரி தாகமாக இருந்தால் குடிக்க தண்ணீரைக் கொடு.
22 இவ்வாறு செய்வதின்மூலம் நீ அவனை வெட்கப்படுத்த முடியும். இது எரிகிற நெருப்புத் தழல்களை அவன் தலையின்மேல் போடுவதற்குச் சமமாகும். உன் எதிரிக்கு நீ நல்லதைச் செய்தபடியால் கர்த்தர் உனக்கு நற்பலனைத் தருவார்.
23 வடக்கே இருந்து வரும் காற்று மழையைக் கொண்டுவரும். இதுபோலவே வம்பானது கோபத்தைக் கொண்டுவரும்.
24 உன்னோடு ஓயாமல் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டிற்குள் வாழ்வதைவிட கூரை மேல் வாழ்வது நல்லது.
25 தூரமான இடத்திலிருந்து வரும் நல்ல செய்தி வெப்பமாகவும் தாகமாகவும் இருக்கும்போது கிடைக்கும், குளிர்ந்த தண்ணீரைப் போன்றதாகும்.
26 ஒரு நல்ல மனிதன் பலவீனமாகி கெட்டவன் பின்னால் போவது என்பது நல்ல தண்ணீர் அழுக்காவதைப் போன்றதாகும்.
27 நீ தேனை மிகுதியாகப் பருகினால் அது உனக்கு நல்லதல்ல. இதுபோலவே உனக்கு மிக அதிகளவு பெருமையைத் தேடிக்கொள்ள முயலாதே.
28 ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவன் மதில் உடைந்துப்போன நகரைப்போன்று இருப்பான்