3
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் என் தூதனை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அவர் எனக்காகப் பாதையை ஆயத்தம் செய்வார். திடீரென்று அவர் தமது ஆலயத்துக்கு வருவார். அவரே நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஆண்டவர். அவரே நீங்கள் விரும்பும் புதிய உடன்படிக்கைக்கான தூதர். உண்மையில் அவர் வந்துக்கொண்டிருக்கிறார்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
“எவனொருவனும் அந்த நேரத்திற்காக தயார் செய்யமுடியாது. அவர் வரும்போது எவரொருவரும் அவருக்கு எதிரே நிற்க முடியாது. அவர் எரியும் நெருப்பைப் போன்றவர். அவர் ஜனங்கள் பொருட்களைச் சுத்தப்படுத்திட பயன்படுத்தும் சவுக்காரம் போன்றவர். அவர் லேவியர்களைச் சுத்தமாக்குவார். அவர் நெருப்பினால் வெள்ளியைச் சுத்தமாக்குவதுபோன்று அவர்களைச் சுத்தமாக்குவார். அவர் அவர்களை சுத்தமான பொன்னையும், வெள்ளியையும் போன்று செய்வார். பிறகு அவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சரியான வழியில் செய்வார்கள். பிறகு கர்த்தர் யூதாவிலும் எருசலேமிலும் இருந்து வருகிற அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வர். இது கடந்த காலத்தில் உள்ளது போல் இருக்கும். இது வெகு காலத்திற்கு முன்னால் உள்ளதைப் போன்றிருக்கும். பிறகு நான் உங்களிடம் வருவேன். நான் சரியானவற்றைச் செய்வேன். நான் ஜனங்கள் செய்த தீமைகளை குறித்து சொல்லுகிறவர் போன்று இருப்பேன். சிலர் தீய மந்திரங்களைச் செய்கிறார்கள். சிலர் விபச்சாரப் பாவத்தைச் செய்கிறார்கள். சிலர் பொய்யான வாக்குறுதிகளைச் செய்கின்றனர். சிலர் தமது வேலைக்காரர்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் தாம் வாக்குறுதியளித்ததுபோன்று பணம் கொடுப்பதில்லை. ஜனங்கள் விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் உதவுவதில்லை. ஜனங்கள் பரதேசிகளுக்கு உதவுவதில்லை. ஜனங்கள் என்னை மதிப்பதில்லை!” சர்வவல்லமையுள்ளகர்த்தர்இவற்றைக் கூறினார்.
தேவனிடமிருந்து திருடுவது
“நானே கர்த்தர். நான் மாறமாட்டேன். நீங்கள் யாக்கோபுவின் குழந்தைகள். நீங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை. ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. உங்கள் முற்பிதாக்களும் கூட என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள். என்னிடம் திரும்பி வாருங்கள். நானும் உங்களிடம் திரும்பி வருவேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றை சொன்னார்.
நீங்கள், “நாங்கள் எவ்வாறு திரும்பி வருவது?” என்று கேட்கிறீர்கள்.
“தேவனிடமிருந்து திருடுவதை நிறுத்துங்கள். ஜனங்கள் தேவனிடமிருந்து திருடக்கூடாது. ஆனால் நீங்கள் என்னிடமிருந்து திருடினீர்கள்!”
நீங்கள், “நாங்கள் உம்மிடமிருந்து எதைத் திருடினோம்?” என்று கேட்கிறீர்கள்.
“நீங்கள் உங்களது பொருட்களில் பத்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் எனக்குச் சிறப்பான காணிக்கைகளையையும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவற்றை எனக்குக் கொடுக்கவில்லை. இந்த வழியில் உங்கள் நாடு முழுவதும் என்னிடமிருந்து திருடினீர்கள். எனவே உங்களுக்குத் தீயவை ஏற்படுகிறது.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “இந்தச் சோதனையை முயற்சிச் செய்து பார். உன்னிடமுள்ளவற்றில் பத்தில் ஒரு பங்கை என்னிடம் கொண்டு வா. அவற்றைக் கருவூலத்தில் போடு. என் வீட்டிற்கு உணவு கொண்டு வா. என்னைச் சோதனை செய். நீ அவற்றைச் செய்தால் பின்னர் நான் உண்மையாக உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்திலிருந்து மழை பெய்வது போன்று நல்லவை உன்னிடம் வரும். உனக்கு தேவைக்கு அதிகமாகவே பொருள் வரும். 11 நான் உங்கள் விளைச்சளை அழிக்கும் பூச்சிகளை அனுமதிக்கமாட்டேன். உங்கள் திராட்சைக்கொடிகள் எல்லாம் திராட்சைகளை விளையச்செய்யும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
12 “பிற நாடுகளிலுள்ள ஜனங்கள் உங்களுக்கு நல்லவர்களாக இருப்பார்கள். நீங்கள் உண்மையில் ஓர் அற்புதமான நாட்டைப் பெறுவீர்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
நியாயத்தீர்ப்புக்கான சிறப்பு நேரம்
13 கர்த்தர் “நீங்கள் என்னிடம் அற்பமானவற்றைப் பேசினீர்கள்” என்றார்.
ஆனால் நீங்கள், “நாங்கள் உம்மைப்பற்றி என்ன பேசினோம்?” என்று கேட்டீர்கள்.
14 நீங்கள், “கர்த்தரை தொழுதுகொள்வது பயனற்றது. கர்த்தர் எங்களிடம் சொன்னவற்றை நாங்கள் செய்தோம். ஆனால் நாங்கள் எந்த நன்மையும் பெறவில்லை. நாங்கள் எங்கள் பாவங்களுக்காக மரித்துப்போனவர்கள் வீட்டில் ஜனங்கள் அழுவது போல் கதறினோம். ஆனால் அது எங்களுக்கு உதவவில்லை என்று கூறினாய். 15 தற்பெருமையுடைவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். தீயவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தேவனுடைய பொறுமையைச் சோதிக்க அவர்கள் தீயவற்றைச் செய்கிறார்கள். தேவன் அவர்களைத் தண்டிக்கிறதில்லை.”
16 தேவனை பின்பற்றுகிறவர்கள் ஒருவருக்கொருவர் பேசினார்கள். கர்த்தர் அவர்கள் பேசுவதைக் கேட்டார். அவருக்கு முன்பாக ஒரு புத்தகம் இருக்கிறது. அப்புத்தகத்தில் தேவனை பின்பற்றுகிறவர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் கர்த்தருடைய நாமத்தை மதிக்கின்றவர்கள்.
17 கர்த்தர், “அந்த ஜனங்கள் எனக்குரியவர்கள். நான் அவர்களிடம் கருணையோடு இருப்பேன். ஒருவன் தனக்குக் கீழ்ப்படிகிற குழந்தைகளிடம் கருணையோடு இருப்பான். அதே முறையில் நான், என்னைப் பின்பற்றுகிறவர்களுடன் கருணையோடு இருப்பேன். 18 நீங்கள் என்னிடம் திரும்ப வாருங்கள். நீங்கள் நல்லதுக்கும் தீயவற்றிற்கும் உள்ள வேறுபாட்டைக் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் தேவனை பின்பற்றுகிறவனுக்கும், தேவனை பின்பற்றாதவனுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துக்கொள்வீர்கள்.