4
அப்போது, ஏழு பெண்கள் ஒருவனை பற்றிக்கொள்வார்கள். அவர்கள், “நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த ஆடைகளை அணிந்துகொள்கிறோம். இவை அனைத்தையும் நாங்களே எங்களுக்குச் செய்துகொள்கிறோம். எங்களை நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை மட்டுமே உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நாங்கள் உன் பெயரை மட்டும் வைத்துக்கொள்வோம். எங்கள் அவமானத்தை நீக்கு” என்று சொல்வார்கள்.
அப்போது, கர்த்தருடைய செடியானது (யூதா) அழகாகவும் உயர்வாகவும் இருக்கும். இஸ்ரவேலில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்கள் தம் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைவார்கள். அப்போது, சீயோனிலும் எருசலேமிலும் வாழ்கின்ற மீதியான ஜனங்கள் பரிசுத்தமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். சிறப்புப் பெயர் பட்டியலில் தம் பெயருள்ள அனைவருக்கும் இது நிகழும். பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.
சீயோன் பெண்களின் இரத்தத்தைக் கர்த்தர் கழுவிவிடுவார். எருசலேமில் உள்ள அனைத்து இரத்தக் கறைகளையும் கர்த்தர் கழுவி போக்குவார். தேவன் நீதியின் ஆவியினால் நியாயம்தீர்ப்பார். சுட்டெரிப்பின் ஆவியினால் அனைத்தையும் சுத்தப்படுத்துவார்.
அப்போது, தேவன் தன் ஜனங்களோடு இருப்பதை நிரூபிப்பார். அந்நாளின் பகலில், தேவன் புகை மேகத்தை தோன்றச் செய்வார். இரவில், தேவன் ஒளிரும் நெருப்புச்சுடரையும் தோன்றச் செய்வார். இச்சாட்சிகள் வானத்தில் ஒவ்வொரு கட்டிடத்தின் மேலும் சீயோன் மலையில் நடை பெறும் ஒவ்வொரு ஜனங்கள் கூட்டத்தின் மேலும் தோன்றும், ஒவ்வொருவரைச் சுற்றிலும் அவர்களைப் பாதுகாக்க ஒரு மூடி அமையும். இம்மூடியானது பாதுகாப்புக்கான இடம். இது ஜனங்களை சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கும். இம்மூடி வெள்ளம் மற்றும் மழையிலிருந்து காத்துக்கொள்ள உதவும்.