உடன்படிக்கைப் பெட்டி
37
சீத்திம் மரத்தினால் பெசலெயேல் பரிசுத்தப் பெட்டியைச் செய்தான். அந்தப் பெட்டி 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் 1 1/2 முழு உயரமும் கொண்டவையாக இருந்தன. அவன் பெட்டியின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பசும் பொன் தகட்டால் மூடினான். பெட்டியைச் சுற்றிலும் பொன் சட்டங்களைச் செய்தான். அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நான்கு மூலைகளிலும் இணைத்தான். அவ்வளையங்கள் பெட்டியைச் சுமப்பதற்கென்று பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு வளையங்கள் இருந்தன. பின் அவன் பெட்டியைச் சுமப்பதற்குத் தேவையான தண்டுகளைச் செய்தான். அவன் சீத்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து அவற்றைப் பசும் பொன்னால் மூடினான். பெட்டியின் இருபுறங்களிலுமுள்ள வளையங்களினுள்ளே தண்டுகளைச் செலுத்தினான். பின் கிருபாசனத்தை பசும் பொன்னால் செய்தான். அது 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் உடையதாக இருந்தது. இரண்டு கேருபீன்களைச் செய்வதற்குப் பெசலெயேல் பொன்னைச் சுத்தியால் அடித்து உருவமைத்தான். இந்தக் கேருபீன்களை கிருபாசனத்தின் இரண்டு ஓரத்திலும் வைத்தான். ஒரு கேருபீனை கிருபாசனத்தின் ஒரு ஓரத்திலும், மற்றொரு கேருபீனை எதிர் ஓரத்திலும் வைத்தான். மூடியோடு இரண்டு கேருபீன் களையும் எதிரெதிரே ஒன்றாக இணைத்தான். கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்த்தப்பட்டிருந்தன. கேருபீன்கள் தங்கள் சிறகுகளால் பெட்டியை மூடியிருந்தன. கிருபாசனத்தின் மேல் குனிந்த நிலையில் தூதர்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
விசேஷ மேசை
10 பின் அவன் சீத்திம் மரப் பலகையிலான மேசையைச் செய்தான். அம்மேசை 2 முழ நீளமும் 1 முழ அகலமும் 1 முழ உயரமும் உள்ளதாக இருந்தது. 11 அவன் மேசையை பசும் பொன்னினால் மூடினான். மேசையைச் சுற்றிலும் பொன் சட்டங்களை இணைத்தான். 12 பின் அவன் 3 அங்குல அகலமுள்ள ஒரு சட்டத்தை மேசையைச் சுற்றிலும் இணைத்தான். அவன் சட்டத்தின் மேல் பொன் தகட்டை வைத்தான். 13 பின் அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்களுமுள்ள நான்கு மூலைகளிலும் வைத்தான். 14 மேசையின் மேற்பகுதியைச் சுற்றிலும் உள்ள சட்டத்தினருகே அவன் அந்த வளையங்களை இணைத்தான். மேசையைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு அவ்வளையங்கள் பயன்பட்டன. 15 பின் அவன் சீத்திம் மரப்பலகையால் செய்யப்பட்ட மேசையைச் சுமக்கும் தண்டுகளைச் செய்தான். தண்டுகளைச் சுத்த பொன்னால் மூடினான். 16 பின் அவன் மேசையில் பயன்படுத்தப்படுவதற்குரிய எல்லாப் பொருட்களையும் செய்தான். தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், கிண்ணங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றையும் அவன் பொன்னால் செய்தான். பானங்களின் காணிக்கைகளை ஊற்றுவதற்குக் கிண்ணங்களும் பாத்திரங்களும் பயன்பட்டன.
குத்துவிளக்குத் தண்டு
17 பிறகு அவன் குத்துவிளக்கைச் செய்தான். அவன் பசும் பொன்னை அடித்து அதன் பீடத்தையும், தண்டையும் செய்தான். பின் அவன் பூக்கள், மொட்டுகள், இதழ்கள் ஆகியவற்றைச் செய்து எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தான். 18 குத்துவிளக்குக்கு ஆறு கிளைகள் இருந்தன. மூன்று கிளைகள் ஒரு புறத்திலும் மூன்று கிளைகள் எதிர் புறத்திலும் இருந்தன. 19 ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருந்தன. அப்பூக்கள் மொட்டுகளோடும், இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன. 20 குத்துவிளக்கின் தண்டில், மேலும் நான்கு பூக்கள் இருந்தன. அவையும் மொட்டுகளோடும் இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன. 21 தண்டின் இருபுறங்களிலுமிருந்து மூன்று கிளைகள் வீதம் ஆறு கிளைகள் இருந்தன. கிளைகள் தண்டோடு இணைந்த மூன்று இடங்களுக்கும் கீழே மொட்டுகளோடும் இதழ்களோடும் கூடிய ஒவ்வொரு பூ இருந்தது. 22 பூக்களும் கிளைகளும் கொண்ட வேலைப்பாடுகள் உடைய அந்தக் குத்துவிளக்கு முழுவதும் பொன்னால் ஆனதாக இருந்தது. இந்தப் பொன் சுத்தியால் அடிக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது. 23 இந்தக் குத்துவிளக்கிற்கு ஏழு அகல்களை அவன் செய்தான். பின் அவன் திரி கத்தரிக்கும் கருவிகளையும், சாம்பல் கிண்ணங்களையும் பொன்னால் செய்தான். 24 குத்து விளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு அவன் 75 பவுண்டு எடையுள்ள சுத்தமான பொன்னைப் பயன்படுத்தினான்.
நறுமணப் பொருள்களை எரிப்பதற்கான பீடம்
25 நறுமணப் பொருள்களை எரிக்கும்படியான பீடத்தையும் அவன் செய்தான். சீத்திம் மரத்தால் இதைச் செய்தான். பீடம் சதுரவடிவமானது. அது 1 முழ நீளமும் 1 முழ அகலமும் 2 முழ உயரமுமாக இருந்தது. நறுமணப் பீடத்தில் நான்கு கொம்புகள் ஒவ்வொரு மூலையிலும் ஒன்வொன்றாக இருந்தன. இவை நறுமணப் பீடத்தோடு ஒன்றாக அடிக்கப்பட்டன. 26 நறுமணப் பீடத்தின் மேல்புறம், பக்கங்கள், கொம்புகள் ஆகியவற்றை அவன் பசும்பொன்னால் மூடினான். பின்பு அவன் நறுமணப் பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தை இணைத்தான். 27 நறுமணப் பீடத்திற்கு இரண்டு பொன் வளையங்கள் செய்தான். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பொன் தகட்டிற்கு அடியில் சேரும்படி பொன் வளையங் களைப் பொருத்தினான். நறுமணப் பீடத்தைத் தூக்கிச் செல்லும்போது, தண்டைக் கோர்க்கும்படி இந்தத் தங்க வளையங்கள் இருந்தன. 28 அவன் சீத்திம் மரத்தினாலான தண்டுகளைச் செய்து அவற்றையும் பொன்னால் மூடினான்.
29 பிறகு அவன் பரிசுத்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்தான். அவன் சுத்தமான நறுமணப் பொருளையும் தயாரித்தான். நறுமணத் திரவியங்களைத் தயாரிக்கும் முறையிலேயே இப்பொருட்கள் அனைத்தையும் அவன் செய்தான்.