பாலைவனத்தில் இஸ்ரவேலர் அலைகின்றனர்
2
1 “பின் கர்த்தர் என்னிடம் சொல்லியபடி நாம் செய்தோம். செங்கடலுக்குச் செல்லும் சாலை வாழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச் சென்றோம். சேயீர் மலைகளைச் சுற்றி பல நாட்கள் அலைந்தோம்.
2 பின் கர்த்தர் என்னிடம்,
3 ‘இம்மலைகளைச் சுற்றி நீங்கள் அலைந்தது போதும். வடக்கே திரும்புங்கள்,
4 ஜனங்களிடம் இதைச் சொல்வாயாக: நீங்கள் சேயீர் நிலப்பகுதியைக் கடந்து செல்வீர்கள். இது ஏசாவின் சந்ததியினரான உங்கள் உறவினர்களுக்கு உரியது. உங்களைக் கண்டு அவர்கள் பயப்படுவார்கள். மிகுந்த எச்சரிக்கையாயிருங்கள்.
5 அவர்களுடன் சண்டையிடாதீர்கள். அவர்களுக்கு உரிமையானதில் ஒரு அடி நிலம் கூட உங்களுக்குத் தரமாட்டேன். ஏனென்றால் சேயீர் மலை நாட்டை ஏசாவிற்குச் சொந்தமாக வழங்கினேன்.
6 நீங்கள் அங்கே உண்ணும் உணவிற்கும் குடிக்கும் தண்ணீருக்கும் ஏசாவின் ஜனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
7 நீங்கள் செய்த ஒவ்வொரு செயலையும் உங்கள் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இப்பெரும் பாலைவனத்தில் நீங்கள் நடந்து செல்வதை அவர் அறிவார். இந்த 40 ஆண்டு காலமும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருந்தார். உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன’ என்று கூறினார்.
8 “ஆகவே சேயீரில் வசித்த ஏசாவின் ஜனங்களாகிய நமது உறவினர்களைக் கடந்தோம். யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து ஏலாத் மற்றும் எசியோன்கே பேர் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் வழியை விட்டு விலகி மோவாப் பாலைவனத்துக்குச் செல்லும் சாலை வழியாகத் திரும்பினோம்.
ஆர் நகரில் இஸ்ரவேலர்
9 “கர்த்தர் என்னிடம், ‘மோவாப் ஜனங்களைத் துன்புறுத்த வேண்டாம், அவர்களுக்கு எதிராகப் போர் துவங்காதீர்கள். அவர்களது நிலம் எதையும் உங்களுக்குத் தரமாட்டேன். லோத்தின் சந்ததியாராகிய அவர்களுக்கு ஆர் நகரை வழங்கினேன்’ என்று கூறினார்.”
10 (கடந்த காலத்தில், ஏமிய ஜனங்கள் ஆர் நகரில் வாழ்ந்தனர்! பலசாலிகளான அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். ஏனாக்கியர்களைப் போலவே ஏமியர்களும் உயரமானவர்கள்.
11 ஏனாக்கியர்கள் ரெப்பெய்தியர்களில் ஒரு பகுதியினர், ஏமியர்களும் ரெப்பெய்தியர்கள் என்றே கருதப்பட்டனர், ஆனால் மோவாப் ஜனங்கள் அவர்களை ஏமியர்கள் என்றே அழைத்தார்கள்,
12 ஓரியர்களும் முன்னர் சேயீரில் வாழ்ந்தார்கள். ஆனால் ஏசாவின் ஜனங்கள் அவர்களிடமிருந்து நாட்டை எடுத்துக்கொண்டார்கள். ஓரியர்களை அழித்துவிட்டு ஏசாவின் ஜனங்கள் அவர்களது நிலத்தில் குடியேறினார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொந்தமாக கர்த்தர் வழங்கிய நிலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் செய்ததைப்போலவே ஏசாவின் ஜனங்களும் செய்தார்கள்.)
13 “கர்த்தர் என்னிடம், ‘இப்பொழுது சேரேத் பள்ளத்தாக்கின் மறுபுறம் செல்லுங்கள்’ என்று கூறினார். ஆகவே நாம் சேரேத் பள்ளத்தாக்கைக் கடந்தோம்.
14 நாம் காதேஸ்பர்னேயாவை விட்டு விலகியதிலிருந்து சேரேத் பள்ளத்தாக்கைக் கடக்க 38 ஆண்டுகள் கடந்தன. நமது முகாமிலிருந்த அத்தலைமுறையைச் சேர்ந்த எல்லா போர் வீரர்களும் மரித்துவிட்டனர். அப்படி நடக்குமென்று கர்த்தர் ஆணையிட்டிருந்தார்.
15 அவர்கள் மரித்து நமது முகாமை விட்டுவிலகும் வரையிலும் கர்த்தர் அந்த ஆட்களுக்கு எதிராயிருந்தார்.
16 “போர்வீரர்கள் அனைவரும் மரித்துப் போனார்கள்.
17 பின் கர்த்தர் என்னிடம்,
18 ‘இன்று நீங்கள் ஆர் நகர எல்லையைக் கடந்து மோவாபிற்குள் நுழையவேண்டும்.
19 நீங்கள் அம்மோனிய ஜனங்களுக்கு அருகில் செல்வீர்கள், அவர்களைத் துன்புறுத்த வேண்டாம். அவர்களுடன் போரிட வேண்டாம், ஏனென்றால் அவர்களது நிலத்தை உங்களுக்குத் தரமாட்டேன் என்று கூறினார். லோத்தின் சந்ததியாராகிய அவர்களுக்கு அந்த நிலத்தைக் கொடுத்து விட்டேன்’ என்றார்.”
20 (அந்நாடும் ரெப்பாயிம் எனப்பட்டது. கடந்த காலத்தில் ரெப்பெய்தியர்கள் அங்கு வாழ்ந்தார்கள். அம்மோனிய ஜனங்கள் அவர்களைச் சம்சூமியர்கள் என்று அழைத்தார்கள்.
21 பலசாலிகளான சம்சூமியர்களில் பலர் அங்கே இருந்தார்கள். ஏனாக்கிய ஜனங்களைப் போலவே அவர்களும் உயரமானவர்கள். சம்சூமியர்களை அழிக்க அம்மோனிய ஜனங்களுக்கு கர்த்தர் உதவினார். நிலங்களை வசப்படுத்திக்கொண்டு அம்மோனிய ஜனங்கள் அங்கு வசித்தார்கள்.
22 ஏசாவின் ஜனங்களுக்கும் தேவன் இதையே செய்தார். கடந்த காலத்தில் சேயீரில் ஓரிய ஜனங்கள் வாழ்ந்தார்கள். ஏசாவின் ஜனங்கள் ஓரியர்களை அழித்தார்கள். ஏசாவின் சந்ததியார் இன்று வரை அங்கே வசிக்கின்றனர்.
23 கெரேத்திலிருந்து வந்த ஜனங்கள் சிலருக்கும் இவ்வாறே தேவன் செய்தார். காசாவைச் சுற்றியுள்ள நகரங்களில் ஆவியர் வாழ்ந்தார்கள். ஆனால் கெரேத்திலிருந்து வந்த ஜனங்கள் சிலர் ஆவியர்களை அழித்தனர். அவர்கள் அந்த நிலங்களை வசப்படுத்திக்கொண்டு இதுவரையிலும் வசித்து வருகின்றனர்.)
எமோரியர்களுடன் போர்
24 “கர்த்தர் என்னிடம், ‘அர்னோன் பள்ளத்தாக்கைக் கடந்து செல்லத் தயாராகுங்கள். எஸ்போனின் அரசனாகிய சீகோன் என்னும் எமோரியர்களை நீங்கள் தோற்கடிக்கச் செய்து, அவனது நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்குவேன். ஆகவே அவனுடன் போரிட்டு அவனது நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
25 உங்களைக் கண்டு எங்குமுள்ள ஜனங்களனைவரையும் பயப்படச் செய்வேன். அவர்கள் உங்களைப் பற்றிய செய்திகளை கேட்டு, பயந்து நடுங்குவார்கள்’ என்று கூறினார்.
26 “நாம் கெதெமோத் பாலைவெளியில் தங்கியிருந்தபொழுது, எஸ்போனின் அரசனாகிய சீகோனிடம் நான் தூதர்களை அனுப்பினேன், அந்தத் தூதுவர்கள் சமாதான வார்த்தைகளை கேட்டு சீகோனிடம்,
27 ‘உங்கள் நாட்டின் வழியாக எங்களைப் போகவிடுங்கள். நாங்கள் சாலைகளிலேயே இருப்போம். சாலையின் வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பமாட்டோம்.
28 நாங்கள் உண்ணும் உணவுக்கோ, அல்லது குடிக்கும் தண்ணீருக்கோ வெள்ளிக் காசுகளைத் தருகிறோம். உங்கள் நாட்டின் வழியாகச் செல்வதற்கு மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்.
29 யோர்தான் நதியைக்கடந்து நமது தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு வழங்கும் நிலத்தை அடையும்வரை உங்கள் நாட்டின் வழியாகப் பயணம் செய்ய விரும்புகிறோம். சேயீரில் வசிக்கும் ஏசாவின் ஜனங்களும் ஆர் நகரில் வசிக்கும் மோவாப் ஜனங்களும் எங்களை அவர்களது நாடுகளின் வழியாகப் பயனம் செய்ய அனுமதித்தார்கள்’ என்று கூறினார்கள்.
30 “ஆனால் எஸ்போனின் அரசன் சீகோன், நம்மை அவனது நாட்டின் வழியாக செல்ல அனுமதிக்கவில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் அவனை மிகவும் பிடிவாதமாக இருக்கச் செய்தார். சீகோனை நீங்கள் தோற்கடிக்கவே கர்த்தர் இவ்வாறு செய்தார். அது மெய்யாகவே நடந்ததை இன்று நாம் அறிவோம்!
31 “கர்த்தர் என்னிடம், ‘அரசன் சீகோனையும் அவனது நாட்டையும் உங்களுக்குத் தருகிறேன். அவனது நாட்டைச் சென்று எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்று கூறினார்.
32 “பின்னர் அரசன் சீகோனும் அவனது குடிமக்கள் அனைவரும் யாகாசில் நம்முடன் போரிட வந்தார்கள்.
33 ஆனால் நமது தேவனாகிய கர்த்தர் அவனை நம்மிடம் ஒப்புக்கொடுத்தார். அரசன் சீகோன், அவனது குமாரர்கள், மற்றும் அவனது குடிமக்கள் அனைவரையும் நாம் தோற்கடித்தோம்.
34 அப்பொழுது சீகோனுக்குச் சொந்தமாயிருந்த எல்லை நகரங்களையும் நாம் அழித்தோம். எல்லா நகரங்களிலுமிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய அனைவரையும் அழித்தோம். எவரையும் உயிருடன் விட்டு வைக்கவில்லை!
35 அந்நகரங்களிலிருந்த கால்நடைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டோம்,
36 அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்த ஆரோவேரையும் அப்பள்ளத்தாக்கின் மையத்திலிருந்த வேறொரு நகரையும் வென்றோம். அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து கீலேயாத் வரைக்குமான எல்லா நகரங்களையும் வெல்லும் வல்லமையை கர்த்தர் நமக்குக் கொடுத்தார். எந்த நகரமும் நம்மைவிட வலிமையில் மிஞ்சியிருக்கவில்லை.
37 ஆனால் அம்மோனிய ஜனங்களின் நாட்டிற்கு அருகில் நீ செல்லவில்லை. யாபோக் ஆற்றங்கரைக்கு அருகிலோ அல்லது மலை நாட்டின் நகரங்களுக்கு அருகிலோ நீ செல்லவில்லை. நமது தேவனாகிய கர்த்தர் நமக்குத் தராத எந்த இடத்திற்கு அருகிலும் நீ செல்லவில்லை.